மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவரான அஜித் பவார் திடெீரென பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் அஜித் பவார் எப்படி பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்? சொந்த அண்ணன் மகனை வைத்தே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு பாஜக செக் வைத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் 2019 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105 இடங்களில் வென்ற நிலையில் சிவசேனா 55 தொகுதிகளில் ஜெயித்தது.
இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் பாஜக-சிவசேனா ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. அதன்பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.
இந்த கூட்டணிக்கு மொத்தம் 169 எம்எல்ஏக்கள் இருந்தன உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டு நடந்த நிலையில் தான் சிவசேனாவின் 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் கூட்டணி ஆட்சிக்கு அவர்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றதோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புது அணியாக செயல்பட்டனர்.
இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டே அணி இணைந்து ஆட்சியை அமைத்தது. இருப்பினும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக இன்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (எதிர்க்கட்சி தலைவர்) தனது ஆதரவாளர்களுடன் பாஜக கூட்டணிக்கு ஆதரவு வழங்கி உள்ளார்.
மேலும் அஜித் பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 28 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 53 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதில் பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர்கள் உள்பட 40 முதல் 43 எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் ஷாக்காகி உள்ளார். பெரும்பாலான எம்எல்ஏக்கள் அஜித் பவார் பக்கம் சென்றுள்ளதால் அவர் பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
மேலும் இன்று காலையில் சரத் பவார் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியது அஜித் பவாருக்கு தெரியாமல் இருந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தான் அஜித் பவார் உள்ளிட்டவர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வர், அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத சூழலில் அஜித் பவார் எப்படி பாஜக கூட்டணிக்கு சென்றார்? என்பது பற்றிய பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அஜித் பவார் என்பவர் சரத் பவாரின் அண்ணன் மகன். இந்நிலையில் தான் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு செல்ல விரும்பினார். ஆனால் அதனை அவருக்கு வழங்க சரத் பவாருக்கு விரும்பவில்லை. அஜித் பவார் பாஜகவுக்கும் நெருக்கம் காட்டி வருவதும், அடிக்கடி கட்சிக்கு எதிரான செயல்களில் அவர் ஈடுபடுவதும் தான் இதற்கு முக்கிய காரணம்.
மேலும் சமீபத்தில் சரத் பவார் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் அஜித் பவார் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் பதவியுடன் கட்சியின் தலைமை பதவி கிடைக்கும் என நினைத்தார். ஆனால் தொண்டர்களின் வலியுறுத்தலால் சரத்பவார் ராஜினாமா முடிவை கைவிட்டார். அதோடு தனது மகள் சுப்ரியா சுலேவை அவர் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்தார். இது அஜித் பவாருக்கு பிடிக்கவில்லை.
இதனால் அஜித் பவார் பாஜகவுடன் ரகசியமாக நெருக்கம் காட்டி வந்ததோடு, பாஜக கூட்டணிக்கு ஆதரவுக்கரம் நீட்ட முடிவு செய்துள்ளார். இதற்கிடையே தான் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தார். அப்போது அஜித் பவார் விவகாரம் குறித்து அவர் பேசியுள்ளார்.அஜித் பவாரை கூட்டணிக்கு சேர்க்க மேலிடம் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து தான் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் இன்று பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி உள்ளார். மேலும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் சைலண்ட்டாகவே நடந்துள்ளன.
அதோடு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சரத் பவார் உள்ளிட்டவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் அஜித் பவாரும், சரத் பவார் மீது கோபமடைந்த நிலையில் அதனை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.
மேலும் அஜித் பவார் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தெரிவித்து துணை முதல்வராகி இருப்பது மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டையும், இந்தியாவில் அஜித் பவாரின் செயல்பாட்டையும் நிச்சயம் தடுக்கும். இது பாஜகவுக்க மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவில் பிளஸ் பாயிண்டாக மாறலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.