அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைவிட இந்தியாவின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிப்பு: அமெரிக்க முன்னணி இதழ் புகழாரம்

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ‘பாரீன் பாலிசி’ இதழ் செயல்படுகிறது. இந்த இதழின் கட்டுரையாளர் ஸ்டீவன் குரூக், மத்திய கிழக்கில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்கா கோலோச்சி வந்தது. ரஷ்யா, சீனாவால் கூட மத்திய கிழக்கில் ஆழமாகக் கால் ஊன்ற வாய்ப்பில்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பின்னுக்குத் தள்ளி இப்போது இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்த இரு நாடுகளும் ஒரு காலத்தில் பாகிஸ்தானோடு நெருக்கம் காட்டி வந்தன. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார உறவை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் இந்தியாவோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் இந்தியா, இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு, தொழில்நுட்ப உறவும் செழித்தோங்கி வளர்ந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் முதலீடு செய்ய இந்திய தொழிலதிபர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள எகிப்து, கடல் பிராந்திய வர்த்தகத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனாவின் சரக்கு கப்பல்கள் செல்கின்றன.

இந்த சூழலில் சீனாவுக்கு போட்டியாக சூயஸ் கால்வாய் பகுதியில் இந்தியாவும் ஆழமாகக் கால் பதித்து வருகிறது. இதில் இந்தியாவுக்கு பக்கபலமாக எகிப்து செயல்படுகிறது. பிரதமர் மோடி அண்மையில் எகிப்தில் பயணம் மேற்கொண்டார். எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி ஓராண்டில் 3 முறை இந்திய பயணம் மேற்கொண்டதால் இரு நாட்டு உறவு வலுவடைந்துள்ளது.

சர்வதேச அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா கைகோத்து செயல்படுகிறது. இந்த சூழலில் மத்திய கிழக்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.