தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தென்கரை பட்டாளம்மன் கோயில் அருகேயுள்ள தோட்டி காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன், அவர் நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் தீபக் ரவிச்சந்திரனும், அவர் நண்பரான காமராஜும் கஞ்சா மற்றும் மது போதையில் அரிவாள், கத்தியுடன் பிரபாகரனின் வீட்டுக்குச் சென்று தகாத வார்த்தைகளைக் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் .

அப்போது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில், அவரின் தங்கை ஹேமலதா வெளியே வந்தபோது, கத்தியால் அவரது உடையைக் கிழித்திருக்கின்றனர். மேலும் வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அதிர்ச்சியடைந்த ஹேமலதா, அவசர எண் 100-க்கு அழைத்து புகார் தெரிவித்ததோடு, உடனடியாக தன்னுடைய தாயாரை அழைத்துக் கொண்டு, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார்.
அதையடுத்து தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன், தினேஷ் ஆகிய இரு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன், காமராஜ் ஆகிய இருவரும் இடுப்பில் இரண்டு பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு, விசாரணைக்குச் சென்ற போலீஸாரிடம், `யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெருவுக்குள் வந்தீர்கள்’ என அவர்களின் சட்டையைப் பிடித்து கேட்டதோடு, `உங்கள்மீது சாதி பெயரைச் சொல்லித் திட்டினீர்கள் என்று வழக்கு தொடர்வோம்’ எனவும் மிரட்டியிருக்கின்றனர்.

இதை போலீஸார் இருவரும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்திருக்கின்றனர். இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசினர். ஒருகட்டத்தில் காமராஜ் அவரது டூவிலரில் வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி, விசாரணைக்குச் சென்ற போலீஸாரை, `ஓங்கி வெட்டினால் தலை துண்டாகப் போய்விடும்’ என மிரட்டி தகராறில் ஈடுபட்டார். அருகே இருந்தவர்கள் காமராஜைத் தடுத்து நிறுத்தியதோடு, போலீஸாரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர். தகவலறிந்த தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதிபாபு சம்பவ இடத்துக்குச் சென்று தீபக் ரவிச்சந்திரனைக் கைதுசெய்தார். போலீஸார் தேடியதை அறிந்து தப்பியோடிய காமராஜைத் தேடி வருகின்றனர்.
விசாரணைக்குச் சென்ற போலீஸாரை, போதை ஆசாமிகள் அரிவாளால் வெட்டமுயன்ற சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.