வாராக்கடன் வரையறைக்குள் கொண்டு வரப்படுமா..? வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய அறிவுறுத்தல்..!

இந்திய ரிசர்வ் வங்கி, சென்ற நிதியாண்டில் வங்கிகள் எப்படி செயல்பட்டுள்ளது என வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை தற்போது தணிக்கை செய்து வருகிறது.

வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெறும் வங்கிகள் அதனை தனிநபர், நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு கடன்களாக வழங்குவது  வாடிக்கை ஆகும். குறிப்பாக வங்கிகள் இதர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC) பெருமளவு கடன்களை வழங்கி வருகின்றன. அவ்வாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்களின் அளவு பெருமளவு அதிகரித்திருப்பதாக ஆர்பிஐ  தணிக்கையில் கண்டறிந்துள்ளது. குறிப்பாக முன்னணியில் உள்ள 20 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு மட்டும் வங்கிகள் தமது மொத்த கடன் அளவில் 13% முதல் 16% வரை கடன்களை வழங்கி இருக்கின்றன.

ரிசர்வ் வங்கி

வங்கிகளின் தலையாயப் பிரச்னையாக வாராக்கடன் உள்ளது. அவ்வாறு வங்கிகள் தமது கையிருப்பில் உள்ள வாரா கடன் அளவிற்கு ஏற்ப வைப்புத் தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும். தற்போது வரை வங்கிகள் இதர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களை இந்தப் பிரிவின் கீழ் கொண்டு வருவது இல்லை. தற்போது வங்கிகள் இந்த பிரிவின் கீழ் வழங்கப்படும் கடன்களையும் வாரா கடன் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்துவதாக செய்திகள் வருகிறது.

வங்கிகளிடமிருந்து கடன்களை பெறும் இது போன்ற நிறுவனங்கள் அந்தத் தொகையை உத்தரவாதம் உள்ள கடன்களை மட்டும் வழங்குவதற்கு உபயோகப்படுத்துவது கிடையாது. உதாரணத்திற்கு வீட்டுக் கடன் பெறும் ஒருவர் அந்தக் கடனுக்கு ஈடாக வீட்டு பத்திரத்தை அந்த வங்கி அல்லது நிறுவனத்திடம் வழங்கியிருப்பார். அந்த நபரால் வீட்டுக் கடனை சரியாக திருப்ப செலுத்த முடியாமல் போனால் அந்த நிறுவனம் வாடிக்கையாளரின் வீட்டை விற்று கடனை வசூலிக்க முடியும். அதுவே உத்தரவாதம் உள்ள கடன் ஆகும்.

கடன் ஃபண்ட்…

ஆனால் வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் நிறுவனங்கள் தனிநபர் கடன்கள் மற்றும் வியாபாரத்துக்கான கடன்களை உத்தரவாதம் இல்லாமல் வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் கடன்கள் திரும்ப வசூலிக்கப்படாமல் போகும் பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கு அது பாதகமாக மாறலாம். இதன் காரணமாக அந்த நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்று இருக்கும் கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே ஆர்பிஐ, வங்கிகள் இது போன்ற கடன்களையும் வாராக்கடன் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கருதுகிறது.

இவ்வாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன் வரையறைக்குள் கொண்டு வருவது தொடர்பான செய்திகள் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஆர்பிஐ இதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடன்களை உடனடியாக இந்த நிதி ஆண்டிலேயே வாரா கடன் வரையறைக்குள் கொண்டு வரப்படுமா அல்லது வங்கிகளுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

வாராக்கடன்

மொத்த வாராக் கடன்..!

வங்கிகள் இதுபோன்ற கடன்களை வாராக்கடன் வரையறைக்குள் கொண்டுவரும்பட்சத்தில் வங்கிகளின் மொத்த வாரா கடன் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வங்கிகளின் லாப விகிதம் சற்று குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு சிறிது பிரச்னை ஏற்பட்டாலும் நீண்ட கால நோக்கில் வங்கிகளை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும்.

இந்த கடன்களையும் ஆர்பிஐ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவதால் இது போன்ற கடன்களில் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்பு குறையும். போதிய கால அவகாசம் வழங்கி ஆர்பிஐ இந்த நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பித்தால் நீண்ட கால நோக்கில் வங்கிகளை மேலும் வலுப்படுத்த உதவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.