ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த புரொமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது, இசை வெளியீட்டு விழா எப்போது, எங்கு நடக்கிறது எனப் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றன. இதற்கான விடைகளை விசாரித்தேன்.
‘அண்ணாத்த’ படத்திற்குப் பின், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. ‘டாக்டர்’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கிய நெல்சன், இதை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில்ஷெட்டி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் என ‘டாக்டர்’ தொழில்நுட்பக் கூட்டணியுடன் ‘ஜெயிலர்’ பட்டைத் தீட்டப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10ம் தேதி படம் வெளியாவதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் எப்போது வருமென இன்று அறிவிக்க உள்ளனர். அநேகமாக முதல் சிங்கிள் நாளையே வெளியாகலாம். அல்லது, இந்த வாரமே வந்துவிடும் என்கிறார்கள்.

ரஜினியின் ‘தர்பார்’, ‘பேட்ட’ படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடந்தது. ஆனால், ‘அண்ணாத்த’ படத்திற்கு நடக்கவில்லை. இதனால் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.
மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் ஷெட்டி, தமன்னா, ஜாக்கி ஷெராப் என மல்டி ஸ்டார்களின் வருகை, விழாவைப் பிரமாண்டமாக்க உள்ளது. இம்மாதம், அதாவது வருகிற 29ம் தேதி சென்னையில் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். அநேகமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறலாம் என்றும் சொல்கின்றனர்.