சென்னை: லியோ படத்தில் விஜய்யுடன் நடிப்பது சவாலாக இருந்தது என்று கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து லியோ படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
லியோ: தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பிரபல நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியான், கதிர், பிரபல மேடை கலைஞர் மாயா கிருஷ்ணன், வையாபுரி என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நா ரெடி: கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான “நா ரெடி” வெளியானது. இந்த பாடலில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ரவுடிசத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சர்ச்சைகளை சந்தித்தாலும், இளைஞர்கள் மத்தியிலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன்: இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரும், இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,இயக்குநர் லோகேஷ் கனராஜ் படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. விக்ரம் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால், லியோ படத்தில் ஒப்பந்தமான உடனே, எனக்கு கால் பண்ணி கண்டிப்பா இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சவாலாக இருந்தது: மேலும், லியோ படப்பிடிப்பில் தளபதி விஜய்யுடன் நடித்தது நல்ல அனுபவமாகவும் சவாலாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் தன்னுடைய பேவரைட் நாயகி திரிஷாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் நிறை வசனம் இருக்கு என்றார். தன்னுடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறிய கௌதம் மேனன், லியோ படத்தில் தனது கேரக்டரின் பெயர் ஜேவில் தொடங்கும் மற்ற விஷயத்தை என்னால் சொல்ல முடியாது என்று அந்த பேட்டியில் கௌதம் மேனன் கூறியுள்ளார்.