Sivakarthikeyan – சிவகார்த்திகேயன்தான் ரஜினிகாந்த்.. பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்த மிஷ்கின்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் ரஜினி போல இல்லை ரஜினியேதான் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருக்கிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். தனக்கு கிடைத்த தொகுப்பாளர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அதன் மூலம் திரையுலக பிரபலம் மூலம் சாமானியர் வரை பலரையும் கவர்ந்தார். இதன் காரணமாக சிவாவுக்கு சினிமா கதவு திறந்தது. மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அவர்.

கமர்ஷியல் ஹீரோ: சினிமா வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை வலுவாக வளர்த்துக்கொண்டு சரசரவென்று முன்னேறினார். இதன் காரணமாக அவரது படங்கள் நல்லபடியாக ஓட கமர்ஷியல் ஹீரோ என்ற அடையாளத்துக்குள் சென்றார் சிவா. தொடர்ந்து அந்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

டாக்டர், டான்: அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்ற படங்களாக அமைந்தன டாக்டர் படமும், டான் படமும். நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் டார்க் காமெடி ஜானரில் வெளியாகி சக்கைபோடு போட்டு 100 கோடி ரூபாயை வசூலித்தது. அதேபோல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படமும் 100 கோடி ரூபாயை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்தார்.

மாவீரன்: அந்த இரண்டு படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் அடியை கொடுத்தது. இதன் காரணமாக சிவாவும் கொஞ்சம் அப்செட்தான். இருப்பினும் அடுத்த படத்தில் விட்டதை பிடித்துவிடும் நோக்கத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் மிஷ்கின், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நிச்சயம் இப்படம் ஹிட்டாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

மாவீரன் ட்ரெய்லர்: இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாவீரன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ஃபேண்டசி களத்தில் படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சென்னையில் நேற்று மாலை பிரமாண்டமாக நடந்த மாவீரன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

மிஷ்கின் பேச்சு: விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “சிவகார்த்திகேயன் ரஜினி போல அடக்கமானவர் என்று நடிகை சரிதா என்னிடம் தெரிவித்தார். ஆனால் ரஜினி மாதிரியெல்லாம் சிவகார்த்திகேயன் இல்லை. அவர் ரஜினியேதான்” என்றார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ரஜினியேதான் என மிஷ்கின் சொல்வதன் மூலம் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்கிறாரா. இதெல்லாம் மிஷ்கினுக்கு தேவையில்லாத பேச்சு என விஜய், அஜித் உள்ளிட்டோரின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.