போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.பி போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்பே இச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், பயத்தினால் புகார் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், வீடியோ காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், அரெஸ்ட் பிரவேஷ் சுக்லா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்எஸ்ஏ) பாயும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்ட முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “சித்தி மாவட்டத்தின் பரபரப்பு வீடியோ எனது கவனத்திற்கு வந்துள்ளது. குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேசிய முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான செயலுக்கு இடமில்லை. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா மீது சித்தியில் உள்ள உள்ளூர் போலீசார் அவருக்கு எதிராக ஐபிசி பிரிவு 294 மற்றும் 504 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்தி பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“ஒருவர் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியானதால், பாஹ்ரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று காவல் நிலையங்களில் இருந்து தனிப்படை அமைக்கப்பட்டு தகவல்களை சேகரித்தனர். அப்பகுதி கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி நள்ளிரவு 2 மணியளவில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இனி அவரிடம் விசாரணை நடத்தப்படும்” என சித்தி கூடுதல் எஸ்.பி அஞ்சுலதா பட்லே கூறியுள்ளார்.