இலத்திரனியல் ஊடகங்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை…

இலத்திரனியல் ஊடகங்கள் மீது இதுவரையிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, அவ்வாறு செய்யும் எண்ணமும் தமக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலத்திரனியல் ஊடக சங்கம், இந்த வரைவை புறக்கணித்ததாகவும், தமக்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் அதற்கான ஒரு இடத்தினை தெரிவு செய்து கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்வதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள உடன்படாத விடயங்கள் இருப்பின் உடன்பட கூடிய நடைமுறைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும்; தெரிவித்தார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நடைமுறைகளின் கீழ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாகவும், அமைச்சர் தனது ஏகாதிபதியத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் தற்போதுள்ள அதிகாரத்தினூடாக தாம் விரும்பியவாறு செயற்பட முடியும். தேவைப்படும் போது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியும். தேவைப்படும் போது அந்த உரிமங்களை இரத்து செய்யும் அதிகாரமும் தமக்கு உண்டு. இரத்து செய்த பின்னர், சட்ட நடவடிக்கை எடுக்கும்வரை அதனை நிறுத்தவும் அவருக்கு அதிகாரம் உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக சுதந்திரத்தை வழங்குவதற்காக குற்றவியல் அவதூறு சட்டத்தை, சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கியதை நினைவுகூர்ந்த ஊடகத்துறை அமைச்சர், இதன் காரணமாக ஊடகப் பாவனையால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்று உதவி பெறுவதற்கான வாய்ப்பு அற்றுப்போனது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.