பட்டம் என்றாலே சிறு வயது நினைவுகள் ஒட்டிக் கொள்ளும். அடுத்தபடியாக பட்டம் என்றால் படங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். சந்திரமுகியின் `கொக்கு பற பற’ பாடல் மற்றும் பாணா காத்தாடி போன்ற ஒரு சில படங்களில் பட்டங்கள் குறித்த காட்சிகள் இடம்பெறும்.
பட்டம் விடுதல் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் தான். பட்டம் விடும் ஆசை அனைவருக்கும் இருக்கும். மாஞ்சா நூலினால் ஏற்படும் பாதிப்புகளால் அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நினைத்த மாத்திரத்தில் எல்லாம் பட்டம் விட முடியாது. அது ஒரு சீசன் விளையாட்டு போல, பட்டங்கள் விற்கப்படும் சமயத்தில் வாங்கிப் பயன்படுத்த முடியும். இப்படி பட்டம் விடுவதற்கு விருப்பம் இருந்தும், விட முடியாமல் இருப்பவர்களுக்குச் சுவையான நற்செய்தி…
சென்னை மாமல்லபுரத்தில் `சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டு நடைபெற உள்ள இந்தத் திருவிழாவைத் தமிழ்நாடு சுற்றுலாத் துறையுடன் இணைந்து குளோபல் மீடியா பாக்ஸ் நடத்த உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் 15 வரை இந்தத் திருவிழா நடைபெறும்.
தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இந்தப் பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்ளப் பலரும் வரவிருக்கின்றனர். பட்டம் விடும் கலைஞர்களின் நுட்பங்கள் குறித்துப் பேசி அறிந்து கொள்ள, இது சிறந்த தருணம். பல வண்ணமயமான பட்டங்கள் பறக்கையில் அது கண்கவர் விருந்தாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டம் விடுதலைத் தாண்டி ஒவ்வொரு நாளும் இசைக் கச்சேரி, விதவிதமான உணவுகள், வாண வேடிக்கைகள் போன்றவையும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், அதில் பங்கு பெறவும் விரும்புபவர்கள், அதற்கான அதிகாரபூர்வ வலைதளங்களான www.tnikf.com, www.instagram/tnkitefestival, www.facebook.com/tnkitefestival ஆகியவற்றின் பக்கங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
பட்டம் போல உயரப் பறப்போம்..!