செந்தில் பாலாஜி இடத்தில் இனி முத்துசாமி: ஸ்டாலின் குட் புக்கில் இடம் பிடித்தது எப்படி?

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் முத்துச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய் தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்கள் சீனியர் அமைச்சர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

உதாரணத்திற்கு திருச்சியுடன் சேர்த்து சேலம் மாவட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தென்காசி மாவட்டத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மாவட்ட பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது.

கோவையில் திமுகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது. எனவே கோவையில் திமுகவை பலப்படுத்தும் வேலைகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வந்தார். இதனாலே மாநகராட்சி தேர்தலில் கோவையில் மிகப் பெரும்பாலான வார்டுகள் திமுக வசமானது.

கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் கோவையை மையமாக வைத்து செந்தில் பாலாஜி தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில் அமலாக்கத்துறை ரெய்டு அவரை மிகவும் பாதித்தது. சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவர் வகித்துவந்த துறைகள் பிரித்து கொடுக்கப்பட்டன. மின்சாரத் துறை தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.

அவர் கவனித்து வந்த கோவை மாவட்டமும் அமைச்சர் முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முத்துசாமி முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று விட்டதாக சொல்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.

வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ள முத்துச்சாமி வசம் தான் சிஎம்டிஏ துறையும் இருந்தது. இதற்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் சிஎம்டிஏ பொறுப்பு கூடுதலாக சேகர்பாபுவிடம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைஅமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டது. அதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியின் பொறுப்புகள் ஒவ்வொன்றாக முத்துச்சாமிக்கு மாற்றப்படுவது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.