பரமக்குடி: மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பரமக்குடியில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்குகிறது. பாஜக ஆளாத மாநிலத்தில் குறைந்த அளவிலான நிதியை அளிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை படிப்டியாக நிறைவேற்றி வருகிறது.
கரோனா, பொருளாதார நெருக்கடி காலத்திலும் சமாளித்து பெண்களுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட வாக்குறுதிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதற்கு மாறாக விலைவாசி உயர்வு பலமடங்கு அதிகரித்துள்ளது. பாஜக அரசு நாட்டில் மக்களை பிளவுபடுத்தி தங்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆதாயம் தேடி வருகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. மத்திய அரசு ரயில் பெட்டிகளில் பொது மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை குறைத்துவிட்டு ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவது என்ற முடிவு சாதாரண மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பு அடையச் செய்யும்.
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என தெரிவிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநரை திரும்ப பெறக்கோரி மத்திய அரசிடம் பேச வேண்டும். அதிமுக ஆளும்போது நடைபெற்ற ஊழலுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு ஆளுநரிடம் அனுமதி கேட்டபொழுது அனுமதி அளிக்காமல் தற்போது, முறையாக அனுமதி கோரவில்லை என தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 30 நாள் அவகாசம் நீதிமன்றம் அளித்த நிலையில் உடனடியாக பதவி நீக்கம் செய்த மத்திய அரசு தற்போது அதிமுகவின் ரவீந்திரநாத் எம்பி பதவியை நீக்கம் செய்யுமா எனக் கூறினார். கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை வழங்கி ஆக வேண்டும்” எனக்கூறினார்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள், மாவட்ட பொதுச்செயலாளர் என்.கே.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.