பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில்… நேற்றைய தினம் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார்.

இந்த திருமண ஏற்பாடுகளை தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார். இவர் பாஜக-வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வருகிறார். பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், ஒரு ஜோடிக்கும் சிறப்பாக செலவு செய்யப்பட்டதாம். அதாவது தலா ஒரு ஜோடிக்கு… 4 கிராம் தங்கத்தில் தாலி, மணமக்களுக்கு பட்டுடைகள், மணப்பெண்ணுக்கான அலங்கார ஏற்பாடு, கல்யாண கவரிங் செட், மணமக்களின் உறவினர்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, தலா ஒரு ஐயர் மற்றும் மங்கள வாத்தியம், இருவேளை உணவு, திருமண பத்திர பதிவு மற்றும் திருமண உதவித்தொகை (தலா 25000 என கூறப்படுகிறது) உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ஆனால், இங்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களில் சிலர்… முன்பே திருமணம் ஆனவர்கள் என்றும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விசாரித்தபோது, நேற்றைய தினம் அங்கு திருமணம் செய்துக்கொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு இன்றைய தினம் பிறந்தநாள் என்ற தகவலும்; இன்னும் இரு தம்பதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில், அதே தம்பதிகள் நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்டதும் தெரியவந்தது.
திண்டிவனம் – கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா (எ) கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர். சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணங்கள் ஆகிவிட்டது. தம்பி எபினேசருக்கு இரண்டு குழந்தைகளும், அண்ணன் கிறிஸ்டோபருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம். இதே போல், அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாம். ஆனாலும், இந்த 3 பேரும் தங்களுடைய மனைவியருடன் நேற்றைய தினம் பாஜக திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதேபோல் இன்னும் சில ஜோடிகள் இருக்கலாம் என கூறப்படும் நிலையில்… இது, பணம் மற்றும் நகைக்காக நிகழ்ந்ததா அல்லது திருமண ஜோடிகள் கிடைக்காமல் அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டதா… என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அண்ணாமலை நடத்திவைத்த இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்ட கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்குத்தான் இன்றைய தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்க எபினேசர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்ற அவரிடம் நம்மை அறிமுகம் செய்துக்கொண்டு, அழைத்ததற்கான காரணத்தையும் சொல்லி, ‘எபினேசர் தானே பேசுகிறீர்கள்’ என்று கேட்டோம். உடனே, “இல்லை சார். நான் வந்து…” என இழுத்தபடி பெயர் சொல்லாமல் மழுப்பியதோடு, “நான் கிடங்கல் இல்லை, சென்னை” என்றபடி முடித்துக்கொண்டார்.

மேலும், இந்த திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்த பாஜக நிர்வாகி ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். “இது போன்ற பிரச்னை விழாவில் இருக்க கூடாது என்பதால்தான், முழுமையாக விசாரித்து கையொப்பங்களை வாங்கிய பிறகுதான் இந்த திருமண விழாவையே நடத்தினோம். தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை என ஜோடிகளின் பெற்றோர்களும் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள். எங்களிடம் 30 – 40 ரிஜக்ஸன் ஆன ஜோடிகளின் பட்டியலும் இருக்கிறது. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால்கூட, அதுகுறித்த ஆதாரத்தை நேரில் வந்துகூட சமர்ப்பியுங்கள்.” என்று முடித்துக்கொண்டார்.
ஆனால், அண்ணாமலை தலைமையில் நடந்த திருமணம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.