மும்பை: அஜித் பவார், பாஜக – ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் இணைந்து துணை முதலமைச்சரான நிலையில், பாஜக ஷிண்டேவை ஒதுக்கி வைக்க திட்டமிட்டிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், பாஜகவினர் அதனை மறுத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், 39 எம்.எல்.ஏக்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
வரவேற்ற ஷிண்டே: ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வரவேற்பு அளித்தார். மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும் என்று அஜித் பவார் அரசில் இணைந்ததை வரவேற்றார் ஷிண்டே.
மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் துணை முதலமைச்சராகப் பதவியேற்றது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
நெருக்கடி: மேலும், அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததோடு, அவரது தரப்பைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளதால், தங்கள் நிலை குறித்தும் ஷிண்டே அணியினர் அச்சம் கொள்வதாக கூறப்படுகிறது. மேலும், ஷிண்டேவை முதல்வர் பதவியில் இருந்து பாஜக தலைமை நீக்க திட்டமிட்டிருப்பதாகவும் பேச்சுகள் எழுந்தன. இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
உடனடியாக நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஷிண்டே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க ஷிண்டே அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஷம்புராஜ் தேசாய், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.
ஏக்நாத் ஷிண்டே அணியின் மற்றொரு அமைச்சர் உதய் சமந்த், “யார் வருகையாலும் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இல்லை. ஷிண்டே மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஷிண்டே தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
பாஜக உறுதி: ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் திட்டம் எதுவும் கட்சிக்கு இல்லை. மேலும் வரவிருக்கும் தேர்தல்களை ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூன்று தலைமையின் கீழ் எதிர்கொள்ள கட்சி திட்டமிட்டுள்ளது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி மேற்பார்வையில் ஷிண்டே பாஜகவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அஜித் பவார் மற்றும் அவரது எம்எல்ஏக்களைக் கவர்வதில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
“தேர்தல்கள் நெருங்கும் சூழலில், ஷிண்டேவை ஒதுக்கி வைப்பது, முக்கியத் தேர்தலுக்குத் தயாராகும் பாஜகவுக்கு சிக்கலாகும், இது எங்கள் நம்பகத்தன்மையைக் கெடுக்கும், எனவே, ஷிண்டேவை ஒதுக்கிவிட்டு, அஜித் பவாருக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.