அகமதபாத்: 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். இந்தியா முழுவதும் அவர் தீவிர பிரசாரம் செய்தார். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது மோடி பெயர் தொடர்பாக சில கருத்துகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கிய லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார். திருடர்கள் பெயர்கள் ஏன் மோடி என்று முடிகிறது? என கேள்வி எழுப்பியது தான் சர்ச்சைக்கு காரணமாகும்.
இதன்மூலம் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்எச் வர்மா தீர்ப்பளித்தார்.
அதோடு உடனடியாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீனும் அளித்தது. அத்துடன், மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை தொடர்ந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வயநாடு தொகுதி எம்பி பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.