ராய்ப்பூர் : இந்திய மக்கள் தொகையில், பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம்.
நாட்டின் முதுகெழும்பாக விவசாயம் இருந்தாலும், நாகரிக வளர்ச்சி, காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால், ஆண்டுதோறும் விவசாயத்தின் பரப்பளவு குறைந்து வருகிறது.
இச்சூழலில், சத்தீஸ்கரைச் சேர்ந்த, ராஜாராம் திரிபாதி என்ற விவசாயி, 1000 ஏக்கரில் மிளகு விவசாயம் செய்து. ஆண்டுக்கு ரூ. 25 கோடி வருமானம் ஈட்டுவதுடன், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.
இது குறித்து, ராஜாராம் திரிபாதி கூறியதாவது:
படித்து முடித்ததும், ஸ்டேட் பேங்கில் சிறிது காலம் பணிபுரிந்தேன். 1998ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, என் தாத்தாவின் வழியில், முழுநேர விவசாயத்தில் ஈடுபட்டேன்.
சொந்தமாக, மாதண்டேஸ்வரி ஹெர்பல் குரூப் என்ற, நிறுவனம் துவங்கி என்னிடம் இருந்த நிலத்துடன், அருகில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களையும் ஒப்பந்தமிட்டு, 1,000 ஏக்கரில் மிளகு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன்.
இதற்காக, ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறேன். இங்கு, விளையும் மிளகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, என்னுடன் சேர்த்து 400 பழங்குடியின குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இயற்கை விவசாயம் மற்றும் பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்வது ஆகியவற்றுடன், விவசாயத்தில் புதுமையையும் புகுத்தினேன்.
வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவசாய முறைகள் குறித்து, அறிந்து கொள்ள ஜெர்மனி சென்றிருந்தபோது, அங்கு, பயிர்களுக்கு மருந்து, உரங்கள் தெளிக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதை பார்த்தேன்.
அதே முறையை, என் நிலத்திலும் செயல்படுத்த, ரூ. 7 கோடியில் ஹெலிகாப்டர் வாங்க, ‛ஆர்டர்’ கொடுத்துள்ளேன்.
நான்கு இருக்கைகள் உள்ள, ஹெலிகாப்டர் வாங்க, ஹாலந்து நிறுவனத்துடன்ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரை இயக்க எனக்கும், என் மகனுக்கும் மத்திய பிரதேசத்தின், உஜ்ஜைனியில் விமான பயிற்சி நிறுவனம், ஒன்று பயிற்சி கொடுக்க உள்ளது.
ஹெலிகாப்டர் வாயிலாக, மருந்து தெளிப்பதால், உரம் வீணாவது தடுக்கப்படுவதுடன், விவசாயிகளின் உடல்நலமும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்