IND vs WI: ஐடியா இல்லாத பிசிசிஐ… ரிங்கு சிங் கைவிடப்பட்டாரா? – ரசிகர்கள் தாக்கு!

Rinku Singh: இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூலை 12ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் உள்ளிட்டவை நடைபெற இருக்கிறது. 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதன்பின், நீண்ட ஓய்வுக்கு பின் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை வெற்றியுடன்  தொடங்க இந்தியா தயாராகி வருகிறது. 

டி20 அணி அறிவிப்பு

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறுவதால், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் தான் இந்திய அணி நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி என அனுபவ வீரர்கள் முன்னிலையில் நிற்க இளம் வீரர்கள் அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த இரு தொடருக்கும் ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். அந்த வகையில், டி20 தொடருக்கான இந்திய அணியும் நேற்று (ஜூலை 5) பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. இதில், ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. 

அந்த 6 வீரர்கள் 

ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா உள்ளிட்டோருக்கு இந்த டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிராஜ் டி20 அணியில் இடம்பிடிக்கவில்லை. கடந்த ஜனவரி – பிப்ரவரியில் நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்த ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, பிருத்வி ஷா, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி ஆகியோருக்கு இதில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு

யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஆவேஷ் கான், சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னோய், அக்சர் படேல் ஆகியோருக்கு இந்த தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் ஐபிஎல் தொடரில் அசத்தலாக விளையாடியதை அடுத்து இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். அக்சர் படேல் தனது திருமணம் காரணமாக நியூசிலாந்து டி20 தொடரை தவறிவிட்டிருந்தார்.

இவர்களை தவிர, இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் இடம்பிடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இடதுகை பேட்டரான அவர் தனது கட்டுப்பாட்டுடன் கூடிய அதிரடி பாணியை வைத்து எதிரணியை கலங்கடிக்க செய்தார். எனவே, அவர் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாவார் என நம்பப்பட்டது. 

பெரும் ஏமாற்றம்

ஆனால், பிசிசிஐ தேர்வுக்குழு இம்முறையும் எதிர்பார்ப்பை பொய்யாக்கி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை கொண்டு இந்திய அணியை பிசிசிஐ கட்டமைக்க திட்டமிட்டிருந்தால், டவுன் தி ஆர்டரில் ரிங்கு சிங்குக்கு நிச்சயம் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

அடுத்தாண்டு, டி20 உலகக்கோப்பை ஜமைக்கா மற்றும் அமெரிக்காவில் நடைபெறுவதாலும், தற்போது நடக்க உள்ள மேற்கு இந்திய தீவுகளில் அவருக்கு வாய்ப்பளித்தால் பெரும் பயிற்சியாக இருந்திருக்கும் எனவும் கூறகின்றனர். ட்விட்டரில் Justice For Rinku Singh என்று வாசகத்தின் அடிப்படையில் ரிங்கு சிங்குக்கு ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். 

ரிங்கு சிங் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் 59.25 சராசரியுடன் 427 ரன்களை குவித்திருந்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 149.52 ஆக இருந்தது. இது ஒருபுறம் இருக்க ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ருதுராஜ் ஆகியோர் அடுத்து நடைபெற உள்ள அயர்லாந்து தொடரில் விளையாடுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜாம்பவானை சந்தித்த இந்திய வீரர்கள்… யார் இந்த சர் கார்பீல்ட் சோபர்ஸ்?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.