சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறையே இருக்காது அதற்கு மாறாக என்ன இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.
கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
மாரியின் கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன் மாரி செல்வராஜ்: முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய கவனத்தை பெற்றுவிட்ட மாரிசெல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான படம் மெகா ஹிட்டாகி மாரியில் கிராஃபை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
விலங்குகளை நடிக்க வைக்கும் மாரி: மாரி செல்வராஜை பலரும் இன்னொரு விஷயத்துக்காக புகழ்வார்கள். அது விலங்குகளையும் அவர் நடிக்க வைப்பது. பரியேறும் பெருமாளில் நாய், கர்ணனில் கழுதை ஆகிய விலங்குகளை பயன்படுத்தியிருந்த அவர் மாமன்னன் படத்தில் பன்றிக்குட்டிகளை பயன்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக பெரும்பாலானோர் எப்போதும் இந்தச் சமூகத்தில் பன்றியை எப்படி இழிவாக பார்க்கிறார்களோ அதேபோல்தான் ஒடுக்கப்பட்டவர்களையும் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்.மேலும் பல ஆண்டு சினிமா வரலாற்றில் ஒரு கதாநாயகன் கையில் பன்றிக்குட்டி ஒன்று தவழ்ந்ததும் மாமன்னனில்தான் முதல்முறை. இந்த மாதிரி விஷயங்கள் போதும் மாரி செல்வராஜ் எப்பேற்பட்ட இயக்குநர் என்பதை புரிந்துகொள்வதற்கு.
பன்றிக்குட்டிகள்: இந்தச் சூழலில் மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறை இருக்காது என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் அடிப்படையில் நாத்திகவாதி. அதேபோல்தான் அவர் மனைவி திவ்யாவும் பெரியாரிஸ்ட்டாம். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் தங்களது திருமணத்தை பெரியவர்களின் வற்புறுத்தலால் கோயிலில் வைக்க ஒத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அதேசமயம் மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறை இருக்காது. அதற்கு மாறாக பன்றிக்குட்டியின் படங்கள் பல இருக்குமாம். ஒருமுறை வீட்டுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அதை பார்த்துவிட்டு என்ன சார் ஒரே பன்றிக்குட்டி ஃபோட்டோவா வெச்சிருக்கீங்க என கேட்டதற்கு எனக்கு பன்றிக்குட்டிகள்னா அவ்வளவு பிடிக்கும் சார் என்றாராம் மாரி செல்வராஜ். இதனை அவரும், அவரது மனைவி திவ்யாவும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டனர்.