`கே.ஜி. எஃப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கியிருக்கும் `சலார்’ படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு வெளியாகியுள்ளது.
இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் இருக்கிறது. இதில் மலையாள நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மன்னர் கெட்டப்பில் இருக்கும் அவருடைய அறிமுகமும் இந்த டீசரில் இடம்பெற்று எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
Pic 1: #KGFChapter2 post credit scene
Pic 2: #SalaarTeaserSo #KGFxSALAAR confirmed #YashBOSS #Prabhas #PrashanthNeel pic.twitter.com/DqPIIlY42Y
— ᴷᶦᶜᶜʰᵃ ⁴⁶ ₦ʂհ@ητђ™ ᵧₐₛₕ ₁₉ (@Nishanthks_54) July 6, 2023
இந்நிலையில், ரசிகர்கள் வழக்கம்போல இந்த டீசரையும் டீ-கோட் செய்யத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, இந்த டீசரில் புல்லரிக்க வைக்கும் வசனங்கள், திரைக்கதை வடிவம், ஆக்ஷன் காட்சிகள், அதே இருண்ட பின்னணி, புழுதிப் பறக்கும் ஆக்ஷன் என ‘கே.ஜி.எஃப்’ படத்தின் சாயலே இருப்பதாகவும், அதனால் இப்படம் ‘கே.ஜி.எஃப்’ யுனிவர்ஸில் இடம்பெறும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் ஆனந்த் நாக் போல இதில் நடிகர் டின்னு ஆனந்த் பேசும் பில்டப் வசனங்கள் ‘கே.ஜி.எஃப்’ படத்தைப் போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர்.

ரசிகர் ஒருவர் பகிர்ந்த ட்வீட்டில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் இடம்பெற்ற சில எண்கள் அப்படியே வரிசை மாறாமல் ‘சலார்’ படத்திலும் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு அதற்குரிய ஸ்க்ரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘கே.ஜி.எஃப்’ கதாநாயகன் யஷ் மற்றும் பிரபாஸ் இருவரும் இப்படத்தில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.
இப்படம், செப்டம்பர் 28-ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.