சான் பிரான்சிஸ்கோ: ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகமும் மெட்டாவின் த்ரெட்ஸ் குறித்துத்தான் பேசி வருகின்றன. இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதலே எண்ணற்ற மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அது ட்விட்டர் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அதற்கு மாற்றாக மெட்டா நிறுவனத்தின் சார்பில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இணைய உலக சமுதாயமே அதை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து, இன்ஸ்டா கணக்கின் மூலம் லாக்-இன் செய்தும் விட்டனர். வரும் நாட்களில் பயனர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் இது எந்த வகையில் ட்விட்டருக்கு மாற்றாக அமைந்துள்ளது என்பது தெரியவரும்.
இந்த சூழலில் ட்விட்டர் நிறுவனம், மெட்டாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. “கடந்த சில ஆண்டுகளாகவே மெட்டா நிறுவனம், ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது. இந்த ஊழியர்களின் உதவியுடன் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள், மற்ற ரகசிய தகவல்களையும் பயன்படுத்தி வெகு சில நாட்களில் ‘த்ரெட்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் ட்விட்டரை அப்படியே பிரதி எடுத்தது போல. இதை தெரிந்தே மெட்டா செய்துள்ளது. அதனால் வழக்கு தொடர உள்ளோம்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மெட்டா திட்டவட்டமாக மறுத்துள்ளது. “போட்டி இருப்பது சரி. ஆனால், ஏமாற்றுவது சரியல்ல” என மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.