நெல்லை: பெங்களூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளக் கூடாது என முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை கர்நாடகாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் முதல்வரை பெங்களூர் செல்ல வேண்டாம் என தாம் கூறுவதாக தெரிவித்தார். நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு அதிகம் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, கட்சித் தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிர பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்ற கேள்வியை எழுப்பியுள்ள கிருஷ்ணசாமி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக கூறிவிட்டு இரண்டரை ஆண்டுகள் அதை தரவில்லை என்றும் இப்போது அது தொடர்பான அறிவிப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குடும்பத் தலைவிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். மகளிர் உரிமைத் தொகை வாங்குவதற்கான கட்டுப்பாடுகள், நிச்சயம் திமுகவின் வாக்கு வங்கியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிக்கும் என்றார்.
ஓட்டு வாங்கும் போது ஒரு பேச்சும் அதன் பிறகு நேர் மாறாக ஒரு பேச்சும் திமுக பேசுவதாக குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களை மூட வேண்டும் என்றும் அதே போல் கண்ட இடங்களில் எல்லாம் மது விற்பதையும் அரசு நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.