அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் ’காவலன் நல வாழ்வுத் திட்டம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி, நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சுமார் ஒன்றரை லட்சம் காவலர்கள், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன அழுத்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் ஒரு திறமையான, நேர்மையான காவல்துறை அதிகாரி. அவருக்கு 6 மாதகாலமாக மனஅழுத்தம் இருப்பதாகவும், கடந்த 20 நாள்களாக அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அப்படி மன அழுத்தமுள்ள ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எதற்காக அவருக்குப் பணி கொடுத்தனர். ஒரு திறமையான, நேர்மையான காவல்துறை உயரதிகாரி, தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டது வேதனையாக இருக்கிறது.

இன்றைய தி.மு.க ஆட்சியாளர்கள், நிமான்ஸ் மருத்துவமனையோடு காவலர் நலவாழ்வு திட்டத்தை நிறுத்திவிட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
டி.ஐ.ஜி., விஜயகுமாரின் இறப்பு, தற்கொலையா… அல்லது வேறு என்ன என்பது குறித்து அரசு முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். சி.பி.ஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும். குடும்பத்திலும் எந்த மன உறுத்தலும் கிடையாது. பணியிலும் எந்த மன அழுத்தமும் இல்லை என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் அவருக்கு எந்த வகையில் மன அழுத்தம் ஏற்பட்டது என்பது, மிகப்பெரிய ஒரு கேள்வியாக எழுந்திருக்கிறது.

அரசு, இனியாவது காவலர்கள், உயரதிகாரிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஓய்வு கொடுக்க வேண்டும். 1999-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது தி.மு.க. அன்று, இதே தி.மு.க-வினர் அமைச்சரவையில் இடம்பெற்றார்கள். அடுத்து காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தனர். கொள்கை, கோட்பாடு என எதுவும் இல்லாத கட்சி தி.மு.க. பதவி வேண்டும் என்றால், எது வேண்டுமானாலும் செய்வார்கள் தி.மு.க-வினர்” என்றார்.