சிம்லா செல்லும் வழியில் விவசாயிகளுக்கு வேளாண் பணியில் உதவிய ராகுல் காந்தி

சோனிபட்: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில் ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தில் வேளாண் பணிகள் செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து பணி செய்தார்.

அதேபோல் அவர் டிராக்டர் ஓட்டியபடியே விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது லேசாக மழை தூரல் விழ அதைப் பொருட்படுத்தாமல் அவர் விவசாயிகளுடன் உரையாடினார். அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து மதினா கிராமத்து விவசாயி சஞ்சய் குமார் கூறுகையில், “திடீரென்று எங்கள் விளைநிலங்கள் அருகில் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் நின்றதும், அதிலிருந்து ராகுல் காந்தி இறங்கி வந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் சிலருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. பின்னர் அவர் பாதுகாவலர்களுடன் அருகில் வந்தபோது அனைவரும் மகிழ்ந்துபோயினர். அவருக்கு நாங்கள் காலை சிற்றுண்டி அளித்தோம். அவர் எங்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார்” என்றார்.

ஹரியாணா மாநிலம் கோஹனா தொகுதி எம்எல்ஏ ஜக்பீர் மாலிக் இது குறித்து கூறுகையில், “ராகுல் காந்தியை விவசாய நிலத்தில் கண்டதில் மக்கள் பெருமகிழ்ச்சி கொண்டனர். ராகுல் ஒரு சிறந்த தலைவர். அவர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், லாரி ஓட்டுநர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரின் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள முற்படுகிறார்” என்றார்.

இதற்கிடையில் ஹரியாணா வேளாண் அமைச்சர் ஜெபி தலால் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் இளவரசர் வயலில் விவசாயிகளுடன் குளிர்ந்த நேரத்தில் போட்டோஷூட் நடத்துவதற்குப் பதிலாக 40 டிகிரி செல்சியஸ் வெயில் தகிக்கும்போது அவர்களுடன் நிலத்தில் பாடுபட்டால் அவர்களின் உண்மையான துயரைத் தெரிந்து கொள்ள முடியும். அத்தகைய கடின உழைப்பச் செலுத்தினால் அவர் சிம்லா செல்லத் தேவை இருக்காது. மாறாக மரத்தடியிலேயே இளைப்பாறலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று, அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்வார் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.