நெல்லை வண்ணாரப்பேட்டை, செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் 6-ம் தேதி மாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடந்திருக்கிறது. அவரின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்தக் காயம் இருந்ததால், அவரை யாராவது கொலைசெய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் கிடந்த முதியவர் உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, கொலையாளியைத் தேடி வந்தனர்.

பேருந்து நிலையம் அருகிலுள்ள வேன் ஸ்டாண்ட் பகுதியில், இரு கார்களுக்கு இடையேயுள்ள பகுதியில் முதியவர் உடல் கிடந்ததால் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர். அப்போது அந்த முதியவர் தன்னுடைய மகனுடன் பேருந்திலிருந்து இறங்கி வருவது தெரியவந்தது. சற்று நேரத்தில் அவருடன் வந்தவர், தனியாக பையுடன் அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிச் செல்வதும் தெரிந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை அடையாளம் காண போலீஸார் தீவிரம் காட்டினார்கள். ஆனால், அந்தப் பகுதியிலுள்ள யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அதனால் வெளியூர் நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். முதியவரின் சட்டை பையில் அவரது சுய அடையாளங்கள் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் வைத்திருந்த பையில் ராஜபாளையத்திலிள்ள ஒரு வணிக நிறுவனத்தின் பெயர் இருந்தது.

அதனால் ராஜபாளையம் போலீஸாரின் துணையுடன் இறந்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், முதியவர் உடல் கிடந்த இடத்தின் அருகேயுள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநர், அந்த முதியவரையும் அவருடன் வந்த மகனையும் பார்த்ததாகத் தெரிவித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்ததைப் பார்த்ததையும் கூறினார். அதனால் ராஜபாளையம் பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முதியவரின் பையிலிருந்த கடையின் பெயரை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த முதியவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (75) என்பது தெரியவந்தது. அவருடன் வந்தவர் அவருடைய மகன் கடல்கண்ணி என்பதும் தெரிந்தது. உடல்நலக்குறைவுடன் சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாரிமுத்துவை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவருடைய அழைத்துவந்திருக்கிறார்.

இந்த விவரங்களைச் சேகரித்த பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸார், முதியவரின் மகன் கடல்கண்ணியைத் தேடினார்கள். அவர் கேரளாவில் துணி வியாபாரம் செய்து வரும் தகவல் கிடைத்ததால், தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த நிலையில், கேரளாவின் கொட்டாரக்கரை பகுதியில் பதுங்கியிருந்த கடல்கண்ணியை போலீஸார் இன்று கைதுசெய்து, நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
தந்தையை மகனே கொலைசெய்த சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அனைத்து உண்மைகளையும் கடல்கண்ணி ஒப்புக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் போலீஸாரிடம், “நான் கேரளாவில் துணி வியாபாரம் எய்து வருகிறேன். என் தந்தைக்கு உடல் நலமில்லாத தகவல் கிடைத்ததால் ஊருக்கு வந்தேன்.
அவர் ஏற்கெனவே எங்களின் பூர்வீக நிலத்தை விற்பனை செய்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருந்த மற்றொரு நிலத்தையும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதற்குள்ளாக அவருக்கு உடல் நலம் சரியில்லாம போனதால் சிகிச்சைக்காக நெல்லைக்கு கூட்டி வந்தேன். வரும் வழியில் நிலம் தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வண்ணார்பேட்டையில் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒதுக்குப் புறமான இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று, கல்லால் அடித்துக் கொலை செய்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சொத்துக்காக தந்தையைக் கொலைசெய்த மகன், கடல்கண்ணியைக் கைதுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.