பத்திரப்பதிவு சேவைக் கட்டணம் சரசர உயர்வு.. தமிழக அரசு அதிரடி.. அதுக்குனு ஒரே அடியாகவா..

சென்னை:
பத்திரப்பதிவு சேவைக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பதிவுத்துறையில் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணப்பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணங்களை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவணங்களின் நகல்களை வழங்குதல் முதலிய சேவைகளை பொறுத்து, கட்டண வீதங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன.

பதிவுச் சட்டம் 1908, பிரிவு 78-இன் கீழ் கட்டண விவர அட்டவணையில் உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக்கட்டணம் ரு.4000-இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும், அதிகபட்ச முத்திரை தீர்வை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனி மனை பதிவுக்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ரூ.1000 ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கான பதிவுக்கட்டணத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட கட்டணங்கள் வரும் ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அதிரடி கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.