பிறந்தநாளை தனது 'செல்லங்களுடன்' கொண்டாடிய தோனி… அவரே பகிர்ந்த வீடியோ இதோ!

MS Dhoni Birthday Celebration Video: உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்எஸ் தோனி தனது 42வது பிறந்தநாளை நேற்று (ஜூலை 7) கொண்டாடினார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் அணிகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. 

இருப்பினும், தோனி தரப்பில் இருந்து நேற்று எவ்வித சமூக வலைதள பதிவும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில், தற்போது, தோனி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

அந்த பதிவில்,”உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எனது பிறந்தநாளில் நான் செய்ததைப் குறித்த ஒரு பார்வை” என்று குறிப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில் தோனி, தனது வளர்ப்பு நாய்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஒரு தட்டில் இருந்த சின்ன கேக்கை வெட்டும் தோனி, அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அவரின் நாய்களுக்கு வீசி உணவளித்தார். 

நாய்களும் தோனியின் ‘த்ரோ’-வை தங்களது வாயால் நன்றாக கேட்ச பிடித்தன எனலாம். அவர் நேர்த்தியாக அந்த கேக்கை வெட்டி, துண்டுகளை வீச நாய்கள் அவற்றை தவறவிடாமல் கச்சிதமாக பிடித்து சாப்பிட்டன. முதலில் மூன்று நாய்கள் இருந்த நிலையில், அடுத்து கடைசியில் மற்றொரு நாயும் வந்து அந்த பார்டியில் இணைந்துகொண்டது.  

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

அவர் அவற்றை ஒழுங்குப்படுத்தி அமரவைத்து அவற்றுக்கு கேக்கை கொடுத்தார். தோனியின் பேச்சை மீறாமல் அவையும் ஒரு ஒழுங்குடன் கேக்கை சாப்பிட்டன. நாய்களுக்கு கொடுத்தது மட்டுமின்றி, அவரும் ஓரிரு துண்டுகளை சாப்பிட்டார். நாய்களுடன் மிக மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், அந்த வீடியோவில் அவர் நாய்களுடன் விளையாடுவதையும் காணமுடியும். நாய், குதிரை உள்ளிட்டவற்றை அவர் பண்ணை வீட்டில் வளர்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

மறுபுறம், தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். 2020ஆம் ஆண்டில் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். அவர் தற்போது அவரின் சொந்த ஊரான ராஞ்சியில் விவசாயப் பண்ணைகளை மேற்பார்வையிட்டு ஓய்வெடுத்து வருகிறார். 2023 ஐபிஎல் தொடரை வென்று, ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியின் தலைமையில் கோப்பையை வென்றது. 

இந்த தொடரில் அவர் கால் முட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்டதை தொடர்ந்து, ஐபிஎல் தொடர் முடிந்த கையுடன் அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அந்த அறுவை சிகிச்சையில் இருந்து தற்போது குணமடைந்து வருவதாக தெரிகிறது. 

தோனியின் சர்வதேச கிரிக்கெட் குறித்து பார்த்தால், அவரின் வலுவான ஃபார்மேட் ஒருநாள் போட்டிகள்தான். 350 ஒருநாள் போட்டிகளில், 50.57 சராசரியில் 10 ஆயிரத்து 773 ரன்கள் எடுத்தார். அவர் இந்தியாவுக்காக 10 சதங்கள் மற்றும் 73 அரைசதங்கள் அடித்தார். அவரின் சிறந்த தனிநபர் ஸ்கோர் 183 நாட் அவுட்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்தாவது அதிக ஸ்கோரை அடித்தவர் தோனி. சச்சின் டெண்டுல்கர் 18 ஆயிரத்து 426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தோனி ஒட்டுமொத்தமாக 11ஆவது மிக வெற்றிகரமான ஓடிஐ பேட்டர் ஆவார்.

கீழ் வரிசையில் விளையாடும் அவர் சாராசரியாக 50 ரன்களை எடுத்து, 10,000-க்கும் அதிகமான ரன்களை எடுத்தது அவரது புள்ளிவிவரங்களை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. குறிப்பாக, அவர் 200 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். 110 போட்டிகளில் வெற்றி பெற்றார். 74 போட்டிகளில் தோல்வியடைந்தார். ஐந்து போட்டிகள் சமன் செய்யப்பட்டன. 11 போட்டிகளுக்கு முடிவுகள் இல்லை. அவர் வெற்றி சதவீதம் 55 ஆகும். தோனியின் தலைமையில் 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.