மழைநீர் கசிவால் வகுப்பறையில் குடை பிடித்தப்படி கல்வி பயிலும் மாணவர்கள்

சிவமொக்கா:

கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி பாழடைந்தும், சேதமடைந்தும் கிடக்கிறது. மேலும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் பாழடைந்து இருப்பதால் மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு மாணவ-மாணவிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் பள்ளியை சீரமைக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமொக்காவில் அரசு பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தால் மழைநீர் கசிவதால் மாணவ-மாணவிகள் குடை பிடித்தப்படி கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் பின்வருமாறு:-

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே மாணவ-மாணவிகள் பாடம் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒசநகரில் உள்ள இந்த அரசு பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழைநீர் வகுப்பறையில் கசிகிறது.

இதனால் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தப்படியே வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள். பாடம் நடத்தும் ஆசிரியரும் குடையை பிடித்தப்படியே பாடம் நடத்தி வருகிறார். இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு யாரோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டத்திலேயே அரசு பள்ளிக்கு இந்த அவல நிலையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதி மக்கள் பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது. ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனேயே வகுப்பறையில் அமர்ந்துள்ளனர்.

இதுபற்றி நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழைகாலம் தொடங்கி உள்ளதால், பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. இதனால் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு அதிகாரிகள் பாதுகாப்பான கட்டிடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுப்பதுடன், விரைவில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.