'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி நடித்தது மிகப்பெரிய தவறு.. அரசியலில் காலி.. சவுக்கு சங்கர் ஓபன் டாக்

சென்னை:
‘மாமன்னன்’ போன்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய தவறை

செய்துவிட்டார் என்றும், அது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பிலும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ . தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது சொந்தக் கட்சியை சேர்ந்த உயர் சாதியினரே எவ்வளவு மோசமாக நடத்துகின்றனர்; அதை உடைத்து வெளியே வர அவரது குடும்பத்தினர் எத்தனை விஷயங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதுதான் திரைப்படத்தின் ‘ஒன்லைன்’.

தமிழகம் முழுவதும் ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வரும் நிலையில், இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் ஒருபக்கம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

பொண்ணு கொடுப்பாங்களா?
மாமன்னன் திரைப்படம் சமூகத்தில் பிரச்சினையை உருவாக்குகின்றன என்று சிலர் சொல்கிறார்கள். “தெற்கே தேவர்களும், தேவேந்திரர்களும் ஒற்றுமையாக தானே இருக்கிறார்கள். இந்த சமயத்தில் இதுபோன்ற படங்கள் அவசியமா” என்றும் பலர் கேட்கின்றனர். தெற்கே தேவர்களும், தேவேந்திரர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றால் பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்துப்பாங்களா? தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், தேவர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தால் ஏற்றுக்கொள்ளவார்களா?

மாமன்னன் திரைப்படம் அவசியம்:
இதெல்லாம் என்றைக்கு நடக்கிறதோ அப்போதுதான் சமூகம் அமைதியாக இருக்கிறது என்று அர்த்தம். அது நடக்கும் வரை பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தில் சாதியின் வீரியம் குறையும். 21-ம் நூற்றாண்டிலும் சாதி பார்க்கப்படுகிறதா என இனியும் தயவுசெய்து கேட்காதீர்கள். திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டதே.. அது சாதியால்தானே? அவ்வளவு ஏன்., மூணு மாசத்துக்கு முன்னாடி திமுக ஊர் தலைவர் ஒருவர், கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞனை எப்படியெல்லாம் திட்டினார் நினைவிருக்கிறதா? அதுக்கு காரணம் சாதி தானே?

உதயநிதி நடித்திருக்க கூடாது:
இதுபோன்ற மனிதர்களுக்காக தான் கர்ணன்கள், அசுரன்கள், மாமன்னன்கள், பரியேறும் பெருமாள்கள் வர வேண்டும் என்று கூறுகிறேன். மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததற்காக உதயநிதிக்கு வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும். ஆனால், இது ரிஸ்க் ஆன சப்ஜெக்ட். இதில் உதயநிதி நடித்திருக்கக் கூடாது. அரசியல்வாதியாக ஆகணும்னா இந்த திரைப்படத்தில் அவர் நடித்திருக்கக் கூடாது. தலித் சமூகத்துக்கு சப்போர்ட் செய்து படத்தில் நடித்ததால் இதர சமூகத்தினரின் கோபத்துக்கு உதயநிதி ஆளாகியுள்ளார். ஒரு அரசியல்வாதி இப்படி செய்திருக்கக்கூடாது.

நடிப்பது பெரிய விஷயம் அல்ல:
ஆனால், திமுகவை பொறுத்தவரை அது திரைப்படங்களில் தான் சமூக நீதியை பேசும். களத்தில் அப்படி எதையும் திமுக செய்யவே செய்யாது. தனபாலை சபாநாயகர் ஆக்கியது ஜெயலலிதா தானே. திமுக அப்படி ஒருகாலமும் செய்திருக்க வாய்ப்பே இல்லை. உதயநிதியாவது இனி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். கேமரா, ஆக்சன் என்றதும் தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுவது பெரிய விஷயம் அல்ல. களத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என சவுக்கு சங்கர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.