மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சுமார் 34 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலின்போது அங்காங்கே சிறு சிறு வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

அதன் காரணமாக, இந்தத் தேர்தலுக்கு மத்தியப் பாதுகாப்புப் படை பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அசம்பாவிதங்கள் நடக்காது என்ற நம்பிக்கையை விதைத்தது. அதைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் தொடங்குவதற்கு முன்பே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. இன்றைய தேர்தலில் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 10-க்கும் மேற்பட்டோர் பேர் இறந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த மரணங்கள் தொடர்பாக பா.ஜ.க தரப்பில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிமீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார், “பா.ஜ.க-வின் வாக்குச்சாவடி முகவர் மாதவ் பிஸ்வாஸ், கூச்பெஹாரின் ஃபலிமாரியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் கொல்லப்பட்டார்.

முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியப் பாதுகாப்புப் படைகள் பாதுகாப்புக்கு வருவதை எதிர்ப்பதற்கான காரணம், அவரது குண்டர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொலைசெய்வதற்கான சுதந்திரம் பறிக்கபடும் என்பதால்தானோ? பர்கானாஸ் மாவட்டத்தில் சுயேச்சை முஸ்லிம் வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் கொன்றிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸுக்கு வன்முறை, கொலை, வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் யுக்தி மட்டுமே தெரியும். மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது.
கூச்பெஹாரிலுள்ள பாராவிடா தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொலைகளுக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத் தலைமை தேர்தல் அதிகாரியும்தான் பொறுப்பு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வைக் குற்றம்சாட்டி வருகிறது. மேற்கு வங்கத்தின் அமைச்சர் ஷஷி பஞ்சா, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பா.ஜ.க, சி.பி.ஐ(எம்) மற்றும் காங்கிரஸூடன் மத்தியப் படைகளும் சேர்ந்துக் கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் பாதுகாப்பு எங்கே நிலைநிறுத்தப்பட்டது… பலத்தப் பாதுகாப்பு நடவடிக்கைக்காக வந்த மத்தியப் பாதுகாப்புப் படை குடிமக்களைப் பாதுகாக்க தவறிவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறைகள் இவ்வளவு வீரியமாக நடந்தபோது மத்தியப் பாதுகாப்புப் படைகள் எங்கே இருந்தன? நாடியாவின் சாப்ராவில் எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் குண்டர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அதன் விளைவாக ஏற்பட்ட மோதலில், கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. வன்முறைச் சம்பவங்கள் தடையின்றி தொடர்ந்தது என்றால்… மத்தியப் பாதுகாப்புப் படை இருந்து என்ன பயன்?

கூச்பெஹாரின் தின்ஹாட்டாவில் வாக்குப் பெட்டியில் பா.ஜ.க வேட்பாளர் தண்ணீரை ஊற்றியபோது மத்தியப் படைகள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை என்றே தெரியவருகிறது. இதன்மூலம், மத்திய பா.ஜ.க அரசு, மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி, அதன் மூலம் மோசமான தந்திரங்களை செயல்படுத்த கணக்கிடப்பட்டதுபோல் தெரிகிறது. இந்த அளவு அப்பட்டமான நாசவேலை ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்.
பா.ஜ.க உள்ளிட்டக் கட்சிகள் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுடன் விளையாடும்போது, வெறும் பார்வையாளர்களாக மத்தியப் பாதுகாப்புப் படையினர் இருந்தனர். ஜனநாயகத்தின்மீதான அப்பட்டமான தாக்குதல் இது. நமது தேர்தல் நடைமுறையின் அடித்தளத்தையே குழிதோண்டிப் புதைத்த பா.ஜ.க-வுக்கு இது மாபெரும் அவமானம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு இல்லை. ஆனாலும், இந்த அளவு வன்முறை சம்பவங்கள் அரங்கேறவில்லை. ஆனால், இந்த முறை மத்தியப் பாதுகாப்பு படையின் பாதுகாப்புக்கு மத்தியில் அரங்கேறியிருக்கும் இந்த 11 மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.