பெலகாவி:கடனை திருப்பி கேட்டதால், ஜெயின் சமூக மடாதிபதியை கொன்று, உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம், கர்நாடகா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவியின் சிக்கோடி தாலுகா ஹிரேகோடி கிராமத்தில், ஜெயின் சமூகத்தின் நந்தித பர்வத ஆசிரமம் உள்ளது. இங்கு மடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீஆச்சார்யா காமகுமார நந்தி மகாராஜ், 51. கடந்த 6 ம் தேதி இரவு வரை, ஆசிரமத்தில் இருந்தார். நேற்று காலையில் இருந்து அவரை காணவில்லை. வெளியே சென்று இருப்பார் என்று, அவரது உதவியாளர் நினைத்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. ஆசிரமம் முழுவதும் தேடியும் காணவில்லை. மொபைல் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
மடாதிபதியை காணவில்லை என்று, சிக்கோடி போலீசில் உதவியாளர் புகார் அளித்தார். மடாதிபதியை காணவில்லை என்ற, தகவல் கிராமம் முழுவதும் காட்டு தீ போல பரவியது. ஆசிரமத்தின் முன்பு குவிந்து, பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். மடாதிபதியை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சென்ற நாராயண் மாலி, 32 மடாதிபதியின் உதவியாளர், உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். மடாதிபதி உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்று இருக்கலாம் என்று, சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து நாராயண் மாலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னுக்கு பின் முரணாக பேசினார். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரமத்தின் வளாகத்தில் வைத்து, மின்சாரம் பாய்ச்சி மடாதிபதியை கொன்றதுடன், அவரது உடலை துண்டு, துண்டு வெட்டி ராய்பாக் தாலுகாவில் உள்ள கடகபாவி என்ற கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இந்த குற்றத்திற்கு நண்பரான ஹுசைன் தலயத், 28 உடந்தையாக இருந்தார் என்றும் கூறினார். இதனால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் மடாதிபதியின் உடலை மீட்க இருவரையும், கடகபாவி கிராமத்திற்கு இன்று போலீசார் அழைத்து சென்றனர். இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. மடாதிபதியின் உடல் வீசப்பட்ட, ஆழ்துளை கிணறு 400 அடி ஆழம் கொண்டது. அதில் 25 அடி ஆழத்தில் ஒரு சேலையில் சுற்றி வீசப்பட்ட, தலையின் இரண்டு துண்டுகள், வயிற்றின் 2 துண்டுகள் என, ஒன்பது உடல் உறுப்புகள் மீட்கப்பட்டு, பெலகாவி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஹிரேகோடி, கடகபாவி கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெலகாவி எஸ்.பி., சஞ்சீவ் பாட்டீல் கூறுகையில், ” மடாதிபதியை காணவில்லை என்று புகார் வந்ததும், அவரை தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆசிரமத்திற்கு யார், யார் வந்தனர் என்று விசாரித்தோம். அப்போது ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சென்ற ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரை கண்காணித்தோம். ஒன்றும் தெரியாதவர் போல, மடாதிபதியை அவரும் தேடினார். அவரை பிடித்து விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பெமுதற்கட்ட விசாரணையில் கடனை திரும்ப கேட்டதால், மடாதிபதியை கொன்று உடலை துண்டு, துண்டாக வீசி ஆழ்துளை கிணற்றில் வீசியது தெரிந்துள்ளது. வேறு காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது” என்றார்.
மடாதிபதியை கொன்றவர்களுக்கு, துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மஸ்தாலா கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே கூறுகையில், ” மடாதிபதி ஸ்ரீஆச்சார்யா காமகுமார நந்தி மகாராஜ் கொலை செய்யப்பட்ட, சம்பவத்தால் நான் வேதனை அடைந்தேன். மடாதிபதி ஒருவர் இப்படி, படுகொலை செய்யப்பட்டது வரலாற்றில் இதுவே முதல்முறை. கொலையாளிகளை விரைந்து கைது செய்த, போலீஸ் துறைக்கு எனது வாழ்த்துக்கள். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மடாதிபதிகள், துறவிகளை அரசு பாதுகாக்க வேண்டும்” என்றார். சம்பவம் குறித்து விரிவான விசாரணக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்