சென்னை: தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் முன்பே தனது 50வது பட வேலைகளை தொடங்கிவிட்டார் தனுஷ்.
அதன்படி, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் தொடங்கியது.
இந்நிலையில், இயக்குநர் நெல்சனுடன் கூட்டணி வைக்கவுள்ள தனுஷின் புதிய படத்தை கமல் தயாரிக்கவுள்ளாராம்.
கமல் – தனுஷ் மெகா கூட்டணி:தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு 5 படங்கள் வெளியாகின. இந்தாண்டு தொடக்கத்தில் வாத்தி திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது 50வது படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி விட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக படக்குழு அறிவித்திருந்தது. சென்னையில் நடைபெற்று வரும் D50 படப்பிடிப்பை பிரேக்கே இல்லாமல் ஒரேகட்டமாக முடிக்க பிளான் செய்துள்ளார் தனுஷ். இன்னொரு பக்கம் இந்தியில் ஆனந்த் எல் ராய், தெலுங்கில் சேகர் கம்முலா ஆகியோரின் படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்து சூப்பரான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தனுஷின் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். டாக்டர் படம் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நெல்சன், அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளதால், அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் நெல்சன். அதேநேரம் நடிகர் தனுஷிடம் ஒரு கதை கூறி அவரது கால்ஷீட்டையும் வாங்கிவிட்டாராம். முதன்முறையாக தனுஷ் – நெல்சன் கூட்டணி இணையவுள்ளது கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் ரிலீஸானதும் தனுஷ் நடிக்கும் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.

இந்நிலையில், தனுஷ் – நெல்சன் இணையும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் மெகா வெற்றியால் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் மீண்டும் படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். சிவகார்த்திகேயனின் SK 21, சிம்புவின் STR 48 என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறார்.
அதே வரிசையில் தற்போது தனுஷின் படத்தை தயாரிக்கவும் கமல் முடிவு செய்துவிட்டாராம். இதனிடையே தனுஷ் – நெல்சன் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் உறுதியாகியுள்ளதாம். ஆகமொத்தம் தனுஷ், கமல், நெல்சன், அனிருத் இணையும் படத்தின் மெகா அப்டேட் விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.