வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே: ‛‛ இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ ( பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்) விஞ்ஞானி பிரதீப் குருல்கர், ஏவுகணை ரகசியங்களை கசிய விட்டார் ” என போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர்.
டிஆர்டிஓ அமைப்பின் பொறியியல் பிரிவு இயக்குநராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர்(59). பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் கசிய விட்டதாக, டிஆர்டிஓ, நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே 3ம் தேதி குருல்கரை, புனேவின், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
2022 முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் குருல்கர் தொடர்பில் இருந்ததாகவும், ‛ஷாரா தாஸ்குப்தா’ என்ற உளவுத்துறை பெண் ஏஜென்ட்டுடன் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட அவர், செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவரிடம் நடந்த விசாரணையில், உளவுத்துறை பெண்ணுடன் ‛ஹனி ட்ராப்பில்’ மாட்டிக் கொண்டு ரகசிய தகவல்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் புனே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‛ஜாரா தாஸ்குப்தா’ என்று அழைக்கப்படும் உளவுத்துறை பெண்ணிடம், மயக்கம் கொண்ட பிரதீப் குருல்கர், இந்தியாவின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement