நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என நான்கு முகங்களோடு தமிழ் சினிமாவில் பயணிக்கும் ஒரு கலைஞன்தான், அருண்ராஜா காமராஜ்.
தற்போது நடிகர் ஜெய்யை வைத்து பிஸியாக ஒரு வெப் சீரிஸை இயக்கிவரும் அருண்ராஜா, ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ என்கிற பாடலை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் பாடல் குறித்து அருண்ராஜாவிடம் பேசினோம்.
ஒரு பெரிய ஸ்டாருக்காக பாடல் எழுதும் போது அவருடைய மாஸ் ஸ்டேடஸுக்கு ஏற்ற மாதிரியும் எழுதணும்; சமூகத்திற்கு தேவையான கருத்தும் சொல்லணும்னு நினைச்சு எழுதுவீங்களா..?

“நான் அப்படி எதையுமே மனசுல வெச்சு எழுதுறது கிடையாது. ஒரு பாடலாசிரியரா எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியா செய்யணும்னு நினைச்சேன். அதை சரியா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். இது ஒரு சீரியஸான பாட்டாகவோ; தீம் சாங்காகவோ இருந்திருந்தால் நீங்க சொல்ற மாதிரி சில விஷயங்களை மனசுல வெச்சு எழுதலாம். ஆனால், இது ஒரு டான்ஸ் நம்பர்தான். அதுனால இதுல சமூக அக்கறையோடு எழுதணும்னு அவசியம் இல்லை. நானும் ஜாலியா இந்தப் பாட்டை எழுதிட்டேன். முதலில் இந்தப் பாட்டுல ரஜினி சார் வருவாருனே எனக்கு தெரியாது. நானுமே வீடியோவுலதான் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். அதுவே எனக்கு பெரிய ஷாக்காகத்தான் இருந்துச்சு. அவர் இந்தப் பாட்டுல வந்தது வேற ஒரு எனர்ஜியை இந்தப் பாட்டுக்கு கொடுத்திருக்கு. ரஜினி சார் இந்தப் பாட்டுல வருவார்னு முன்னாடியே எனக்கு சொல்லியிருந்தால் அது எனக்கு பிரஷராகத்தான் இருந்திருக்கும். அப்படி சொல்லாதனால நான் ட்யூனுக்காக இந்தப் பாட்டை எழுதிட்டேன்.”
பொதுவாகவே பாடல்கள் எழுதுவதற்கு ரிசர்ச் பண்ணுவீங்களா..?

“அது எல்லா பாடல்களுக்கும் தேவைப்படாதுனு நினைக்கிறேன். எனக்கு தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுதப்போறேன்னா அதுக்கு ரிசர்ச் தேவை. என்னை சுற்றியிருக்கிற விஷயங்களைப் பற்றித்தான் எழுதப்போறேன்னா அதுக்கு ரிசர்ச் தேவையில்லை. மத்தப்படி நான் எழுதுற வார்த்தைகள் அந்த ட்யூனோட மீட்டர்குள்ள எப்படி வைக்கிறதுனு மட்டும்தான் யோசிப்பேன். ஏன்னா, நான் ஒன்னும் பெரிய இலக்கியம் எழுதல. அப்படி எழுதும் போது அதுக்காக வொர்க் எப்படி பண்ணணுமோ அப்படி பண்ணுவேன். நான் இப்போ எழுதுற வரிகளுக்கு நாலு வாட்ஸ்அப் மெசேஜ் படிச்சாலே போதும். இதுதான் பாடல்கள் எழுதுறதுக்கு நான் ஃபாலோ பண்ற விஷயங்கள்.”
அனிருத்துக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி சொல்லுங்க..?

“நான் எப்போதுமே வியந்து பார்க்கிற ஒரு ஆள்தான் அனிருத். அவரோட முதல் படத்தின் பாடல்களை கேட்டுட்டு அப்போவே நான் ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன். அதை பார்த்த என் நண்பர்கள் சிலருக்கு அதில் கருத்து வேறுபாடும் இருந்துச்சு. ‘அது எப்படி நீ சொல்ற’னு கேட்டாங்க. என்னை பொறுத்தவரைக்கும் அவர் இசையமைச்ச அந்தப் பாடல்களை கேட்டப்போ ஒரு தாக்கம் இருந்துச்சு. இவர் இங்கேயே இருக்கப்போற ஆள் இல்லை; எங்கேயோ போகப்போறார்னு எனக்கு தோணுச்சு. அதை இன்னைக்கு நான் கண் முன்னாடியே பார்க்கிறேன். ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. இந்த வன்மம் சூழ் உலகத்துல ஒரு மனுஷன் எப்போதுமே பாஸிட்டிவ்வா இருக்கிறார்ல அதுவே ரொம்ப மகிழ்ச்சியாக விஷயம்தான்.”
நீங்க உதயநிதிவை வெச்சு ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பண்ணும் போது பல மேடைகளில் உங்களைப் புகழ்ந்து பேசியிருப்பார். இப்போதும் அந்த நட்பு தொடர்ந்துகிட்டு இருக்கா?

“உதய் சார் என்னைப் பற்றி பேசியது எல்லாமே எனக்கு ரொம்ப எமோஷனலா கனெக்ட்டாகி இருக்கு. ஏன்னா, எனக்கும் அவருக்குமான நட்பு ஒரு இயக்குநருக்கும் நடிகருக்குமான உறவாக மட்டும் இருந்ததில்லை. அவர் என் கூட பிறந்தவர் மாதிரிதான் எனக்கு ஃபீல் ஆகும். இந்த உறவை என் கடைசி காலம் வரைக்கும் கொண்டு போகணும்னு நினைக்கிறேன். ஏன்னா, கொரோனா காலத்தில் எனக்கு நடந்த பிரச்னை; அவர் எனக்காக வந்து நின்னது; என் கூட சேர்ந்து எனக்கானவங்களை மீட்டெடுக்க போராடுனதுனு எல்லாமே இன்னும் என் கண் முன்னாடி இருக்குது. நானும் அவரும் ஆரம்பத்தில் இருந்தே நண்பர்களாக பழகல. அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா தான் இருந்தார். ஆனால், நான் அவரை சார்னு தான் கூப்பிடுவேன். ‘நீங்க பேரைச் சொல்லிக்கூட கூப்பிடுங்க. சார்னு சொல்லாதீங்க’னு அவரும் சொன்னார். ஆனால், நான்தான் எனக்கு இப்படி கூப்பிடத்தான் பிடிச்சிருக்குனு சொன்னேன். அதுதான் எனக்கு ரொம்ப கனெக்ட் ஆகுற உணர்வை கொடுத்துச்சு. எங்களுக்குள்ள அப்படி ஒரு பான்டிங்தான் இப்போதும் இருக்கு. அவரும் என்னை ஸ்பெஷலா ட்ரீட் பண்றார்கிற ஃபீல் எனக்கு எப்போதுமே இருக்கு. ‘மாமன்னன்’ படத்தோட வெற்றியைப் பார்க்கும் போதும் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. இது அவரோட கடைசி படம்னு சொல்றதுல எனக்கு விருப்பமே இல்லை. ஒரு வேளை அவர் மனசு மாறினால் அவரை வெச்சு படம் பண்றதுக்கு முதல் ஆளாக நான் போய் நிப்பேன்.”