சென்னை: மாமன்னன் படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வச்ச சீன் அவருக்கே ரியலாக நடந்திருக்கே என நெட்டிசன்கள் கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
மாமன்னன் படம் வெளியாகி முதல் வாரத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடவில்லை.
40 கோடி வரை மாமன்னன் திரைப்படம் வசூல் ஈட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ரிலீசுக்கு முன்பிருந்து ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன பின்னரும் அந்த படத்தை பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக தெரியவில்லை.
சமூக நீதி பேசிய மாமன்னன்: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வலிமையான சமூக நீதியை மாமன்னன் படம் பேசிய நிலையில், மக்கள் மத்தியில் அந்த படத்துக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினை வைத்தே இப்படியொரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கியது பெரிய விஷயம் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த தனபாலின் கதை என்றும் எடப்பாடி தான் வில்லன் பகத் ஃபாசில் ரோல் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் மாமன்னன் படத்தை சுற்றி ஓடின.
வெடித்த சர்ச்சை: மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் இருந்த போதே தேவர்மகன் படம் தனக்கு தந்த வலிகளின் வெளிப்பாடு தான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், படத்தின் ரிலீசுக்கு முன்பாக கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்று அந்த சர்ச்சைக்கு மாரி செல்வராஜ் மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
பிளாஸ்டிக் சேர் சர்ச்சை: மாமன்னன் படத்தில் பட்டியலின வேட்பாளருக்கு பிளாஸ்டிக் சேரை போட்டு பகத் ஃபாசில் உட்கார வைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதே போல திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சோபாவில் உட்கார்ந்திருக்க வடிவேலு மற்றும் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரும் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து இருப்பது போன்ற போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
வடிவேலு வீடு: ஆனால், இது உதயநிதி வீடு இல்லை என்றும் வடிவேலு வீட்டில் தான் உதயநிதியை சோபாவில் உட்கார வைத்து வடிவேலு அழகு பார்த்துள்ளார் என்றும் உதயநிதியின் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
தனது வலியைத் தான் மாரி செல்வராஜ் படத்தில் வைத்திருக்கிறார் என்றும் இந்த நிலை மாறணும் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.