சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளார் விஜய்.
இப்படத்தின் அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படம் இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
டபுள் சைட் கேம் ஆடும் வெங்கட் பிரபு: பீஸ்ட், வாரிசு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், திடீரென தளபதி 68 அப்டேட் வெளியாகி அதிரடி காட்டியது.
அதன்படி, விஜய்யின் 68வது படமாக உருவாகும் ‘தளபதி 68’-ஐ வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். அட்லீ உள்ளிட்ட மேலும் சில இயக்குநர்களின் பெயர்கள் முன்னிலையில் இருந்த நிலையில், வெங்கட் பிரபுவுக்கு விஜய் ஓக்கே சொன்னது திரையுலகையே அதிர வைத்தது. சென்னை 28, மங்காத்தா, மாநாடு தவிர வெங்கட் பிரபு இயக்கிய மற்ற படங்கள் பெரிதாக சக்சஸ் ஆகவில்லை.
முக்கியமாக மாநாடுக்குப் பின்னர் வெளியான மன்மத லீலை, கஸ்டடி திரைப்படங்கள் சுத்தமாக எடுபடவில்லை. இதனால் தான் விஜய் எப்படி வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் கொடுத்தார் என பெரிய விவாதமே எழுந்தது. இந்நிலையில், லியோ ரிலீஸானதும் தளபதி 68 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சீக்ரெட்டாக இருக்க வேண்டிய அப்டேட்ஸ் எல்லாம் வெங்கட் பிரபுவின் அசிஸ்டெண்ட் இயக்குநர்களால் வெளியானதாக சொல்லப்பட்டது. இதனிடையே வெங்கட் பிரபு அடிக்கடி கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை சந்தித்து வருவதும் வைரலாகி வருகிறது. கஸ்டடி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே கிச்சா சுதீப்பை ஓரிரு முறை சந்தித்திருந்தார் வெங்கட் பிரபு. அப்போதே இருவரது கூட்டணியிலும் ஒரு படம் உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால், தளபதி 68ல் கமிட்டானதால் கிச்சா சுதீப் ப்ராஜெக்ட் தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது தளபதி 68 தொடங்கும் முன்பே சில பஞ்சாயத்துகள் போய்க்கொண்டிருப்பதால், கிச்சா சுதீப் படத்தை தொடங்க வெங்கட் பிரபு பிளான் செய்வதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என்றும், தளபதி 68 முடிந்த பின்னரே கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.