இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருந்த நிலையில், விசாரணையில் தான் பொய் சொன்னதாகப் பாதிக்கப்பட்ட நபரே கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்தன.
இதில் குற்றவாளி இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஷ்மத் ராவத் என்பவர் ஆரம்பக்கட்ட விசாரணையில் தான் பொய் சொன்னதாக அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார்.
ஷாக் வீடியோ: கடந்த வாரம் இணையத்தில் பகீர் வீடியோ ஒன்று டிரெண்டானது. மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த ஷ்மத் ராவத் என்பர் மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிப்பது அந்த வீடியோவில் இருந்தது. மனிதத் தன்மையற்ற இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் பிரவேஷ் சுக்லா என்று அடையாளம் காணப்பட்டது. அவர் அம்மாநில பாஜக நிர்வாகி என்றும் கூறப்பட்டது. இந்த வீடியோ நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் பிரவேஷ் சுக்லாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரவேஷ் சுக்லா மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரது வீடு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லி மறுநாளே புல்டோசர் கொண்டும் இடிக்கப்பட்டது. மேலும், மறுநாளே ஷ்மத் ராவத்தை நேரில் அழைத்த அம்மாநில முதல்வர் சவுஹான், அவரது கால்களைக் கழுவினார். மேலும், ஷ்மத் ராவத்தை தனது நண்பர் என்றும் குறிப்பிட்டு பேட்டி அளித்தார்.
சொன்னது பொய்: இதற்கிடையே இச்சம்பவம் குறித்துப் பேசிய தஷ்மத் ராவத் தொடக்கத்தில் இந்த விசாரணையில் தான் பொய் சொன்னதாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் கலெக்டர் தன்னிடம் நடத்திய விசாரணையின் போது பாதிக்கப்பட்ட நபர் தான் இல்லை என்று கலெக்டரிடம் பொய் சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் 2020இல் நடந்ததாகவும், அப்போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் பொய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தஷ்மத் ராவத் கூறுகையில், “ஆரம்பத்தில் விசாரணையில் இந்த சம்பவம் 2020இல் நடந்தது என நான் பொய் சொன்னேன். மேலும், நான் அப்போது போதையில் இருந்ததாகவும் இதனால் அப்போது என்ன நடந்தது என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறினேன். மேலும், என் மீது சிறுநீர் கழித்தவர் யார் என்று கூட நான் பார்க்கவில்லை எனப் பொய் சொன்னேன்.
என்ன காரணம்: ஏனென்றால் வீடியோ டிரெண்டானதும் முதலில் போலீசாரும், அதன் பிறகு கலெக்டரும் என்னிடம் விசாரணை நடத்தினர்.. இதனால் உண்மையில் நான் பயந்துவிட்டேன். இதன் காரணமாகவே வீடியோவில் துன்புறுத்தப்பட்ட நபர் நான் இல்லை என்று பொய் சொன்னேன். பலரும் என்னிடம் கேட்ட போதும் நான் அதே பொய்யைச் சொன்னேன். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்றார்.
இந்தச் சம்பவத்தால் தஷ்மத் ராவத் பாதிக்கப்பட்டாலும் கூட இதில் தொடர்புடைய குற்றவாளியை விடுவிக்க வேண்டும் என அவரே அரசை வலியுறுத்தியுள்ளார், இது குறித்து அவர் கூறுகையில், “நான் அரசுக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. சுக்லா தனது தவறை உணர்ந்துவிட்டார். இதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை. நடந்தது நடந்துவிட்டது. அவர் தனது தவறை உணர்ந்துள்ளார். இதனால் அவரை விடுவிப்பதே சரி என நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்: இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ஆனால் மத்தியப் பிரதேச முதல்வர் வேறு ஒருவரின் காலை கழுவியதாக அம்மாநில காங்கிரஸ் சாடியது. உண்மையாகப் பாதிக்கப்பட்டவரை மறைத்து, சவுஹான் அரசு டிராமா நடத்துவதாக அம்மாநில காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது ஷ்மத் ராவத் பாதிக்கப்பட்ட நபர் தானில்லை என்று ஏன் பொய் சொன்னேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.