பிறந்த நாளில் அறக்கட்டளை தொடங்கிய ரிஷப் ஷெட்டி

கன்னட சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் ரிஷப் ஷெட்டி. 'காந்தாரா' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ரிஷப்புக்கு தெரியாமலேயே அவரது மனைவி பிரகதி ரெட்டி அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். அதற்கு 'ரிஷப் பவுண்டேஷன்' என்று பெயரும் வைத்துள்ளார்.

இதுகுறித்து ரிஷப் ஷெட்டி கூறும்போது “சினிமா துறையில் நுழைந்து சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததுக்கு நன்றி. 'காந்தாரா' படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பால் அது உலக அளவில் வெற்றி பெற்றது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என்றார்.

இதுகுறித்து பிரகதி கூறும்போது “மற்றவர்களுக்கு உதவுவதற்காக எதாவது பங்களிப்பை செலுத்துங்கள் என பலரும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அதிகாரபூர்வமாக ஒரு அறக்கட்டடளையை நிறுவ வேண்டும் என நினைத்து இதை தொடங்கினேன், உதவி தேவைப்படும் தனி நபர்கள், குழந்தைகளுக்கு இதன் மூலம் உதவலாம் என முடிவு செய்தோம். வேறு எந்த பொருளை பரிசாக கொடுத்திருந்தாலும் ரிஷப் ஷெட்டி இந்த அளவுக்கு மகிழ்ந்திருக்க மாட்டார். இந்த அறக்கட்டளை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்”என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.