சென்னை:
கேரளாவை அடித்து துவைத்த கனமழை அப்படியே யூடர்ன் அடித்து தமிழகத்துக்கு திரும்பி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யப்போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடைக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மழைக்காலம் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பேய் மழை பெய்தது. விடிய விடிய மழை அடித்து நொறுக்கியதால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
இந்த சூழலில், கேரளாவை அடித்த கையோடு மழை மேகங்கள் தற்போது தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் கோவை, நீலகிரி, கொடைக்கானல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. சென்னையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் மழை பெய்து வருகிறது. மேற்கு காற்று திசையின் மாறுபாட்டால் சென்னையில் மழை பெய்கிறது.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களை அடர் கருமேகங்கள் மூழ்கடித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த 11 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் மிக மிக கனமழை பெய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்யும் இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
கனமழை நீடிக்கும் என்பதால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த 11 மாவட்டங்களை தவிர்த்து, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.