ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.இதனால் இந்திய அணி இம்முறையும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங், இந்திய அணி இம்முறை உலகக்கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டர் கவலையளிப்பதாகவும், இதனை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா?
யூடியூப் சேனல் ஒன்றுக்கு யுவ்ராஜ் சிங் பேட்டியளித்தபோது, “உண்மையைச் சொல்வதானால், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லப் போகிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தியா வெல்லும் என்று ஒரு தேசபக்தராக விரும்புகிறேன் என்பதை தான் என்னால் சொல்ல முடியும். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் காயங்கள் குறித்து நிறைய கவலைகள் இருப்பதை நான் காண்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லாதது ஏமாற்றமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மிடில் ஆர்டரில் அணிக்கு முன்னேற்றம் தேவை
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘டீம் இந்தியாவின் டாப் ஆர்டர் நன்றாக உள்ளது, ஆனால் மிடில் ஆர்டரை ஒழுங்கமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்லாட்டுகள் 4 மற்றும் 5 மிகவும் முக்கியமானவை. ரிஷப் பண்ட் ஐபிஎல் அணிக்கு நான்காவது இடத்தில் பேட்டிங் செய்கிறார் என்றால், அவர் தேசிய அணியிலும் நான்காவது இடத்தில் வர வேண்டும். நான்காம் நம்பர் பேட்ஸ்மேன் ஒரு அட்டகாசமான ரன் அடிப்பவராக இருக்க முடியாது. அவர் அழுத்தத்தைக் கையாளக்கூடியவராக இருக்க வேண்டும். நாக்-அவுட் போட்டிகள் போன்ற அழுத்தமான போட்டிகளில் விளையாடும்போது, அதில் இந்தியா வீரர்களை சோதனை செய்து கொண்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
4வது இடத்தில் யாருக்கு வாய்ப்பு
4வது இடத்தில் இந்திய அணியில் விளையாட தகுதியானவர்கள் யார் என யுவ்ராஜ் சிங்கிடம் கேட்டபோது, ரிங்கு சிங் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த இடத்திற்கு தகுதியானவர்கள் என கூறினார். ஐபிஎல் போட்டிகளில் ரிங்கு சிங் நன்றாக பேட்டிங் செய்தார் என்பதால், அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக ஆடிய விதத்தை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என யுவ்ராஜ் சிங் கூறினார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கார் நியமிக்கப்பட்டது நல்ல முடிவு என்றும் தெரிவித்தார்.