மணாலி: பிரபல பாலிவுட் நடிகர் ருஸ்லான் மும்தாஜ் மணாலியில் வெள்ளத்தால் சிக்கிக் கொண்டார், இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “நிஜமாகவே நான் இவ்வளவு மிகவும் அழகான இடத்தில் சிக்கிக் கொள்வேன் என்று நினைச்சு கூட பார்த்தது இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இப்போது பாதுகாப்பாக இருப்பதாக இன்னொரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ருஸ்லான் மும்தாஜ் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்குபெய்த கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த நகரத்தை விட்டு வெளியே வரமுடியாமல் அவர் சிக்கி கொண்டார் .
இது தொடர்பாக ருஸ்லான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மணாலி நகரத்தின் நிலை பற்றி வீடியோ ஒன்றை காட்டி உள்ளார். அதில் அவர் தங்கி உள்ள ஓட்டல் அருகே வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதை காட்டினார். அத்துடன் மணாலியிலிருந்து சண்டிகரை இணைக்கும் சாலை பெரும் வெள்ளத்தில் மூழ்கிய காட்சியையும் காட்டினார். அவர் காண்பித்த வீடியோவில் கார் ஒன்று பேய் போல் செல்லும் ஆற்றின் அருகே எப்படியாவது செல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறது. ஆனால் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தில் போராடியபடி கார் போகிறது. இப்படித்தான் அந்த வீடியோ இருந்தது.
அந்த வீடியோவில் மணாலி சண்டிகர் சாலை எப்படி மூழ்கியது என்பதை பற்றி பேசினார். அவர் கூறும் போது, ” நான் நெட்வொர்க் எதுவும் இல்லாமல் மணாலியில் இப்படி சிக்கிக் கொள்வேன் என்று நினைக்கவில்லை.. சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் வீடு திரும்ப வழியின்றி இருக்கிறேன். படப்படிப்பும் எடுக்கப்படவில்லை. மிகவும் கடினமான நேரம் இது. இவ்வளவு மிகவும் அழகான இடத்தில் எனது கடினமான நேரம் இருக்கும் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா, சோகமாக இருக்க வேண்டுமா, நன்றியுடன் இருக்க வேண்டுமா, அல்லது என் ஆப்பிளை ரசிக்க வேண்டுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மணாலியில் தற்போது ஏராளமான ஓட்டல்கள், வீடுகள், வாகனங்கள் மற்றும் பெரிய சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மிகப்பெரிய இயற்கை பேரழிவு நடந்துள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட்” அலர்ட் விடுத்துள்ளது.
மழையால் மிக மோசமான பாதிப்புகளை மணாலி சந்தித்துள்ளது பல சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிக்கிறார்கள். எப்படி சொந்த ஊருக்கு போவது என்று தெரியாமல் கலங்கி போய் இருக்கிறார்கள். இப்போதைய நிலையில் சாலை மார்க்கமாக கடந்து செல்வது எளிதானதாக இல்லை. வெள்ளம் வடிந்தால் தான் மக்களால் போக முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
மணாலி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மற்றொரு வீடியோவில், மணலி அல்லுவில் உள்ள ஒரு ஹோட்டலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பாலம் ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது