மோடி எப்போ அப்படி கூறினார்? ஸ்டாலினும் உதயநிதியும் மன்னிப்பு கேட்கணும்.. வானதி சீனிவாசன் ஆவேசம்!

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். 2014 தேர்தலுக்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கலாம் என்று கூறினார், 15 லட்சம் கூட வேண்டாம் 15 ரூபாயாவது கொடுத்தார்களா? என்று கடுமையாக சாடியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் – இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை” என, பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்” என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது.

ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்கள், திமுக தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு

தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.