ரிஸ்க் எடுத்ததால் தான் சினிமாவில் இருக்கிறேன் – சிவகார்த்திகேயன் பேட்டி

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிகா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாவீரன்'. வரும் ஜூலை 14ல் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படக்குழுவினர் முழுவீச்சில் புரொமோஷன் செய்தி வருகின்றனர். பத்திரிக்கையாளர்களுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி :

* மாவீரன் தலைப்பு ஏன்…?
படத்தில் காமிக்ஸ் வரையும் சத்யா என்ற ரோலில் நடித்துள்ளேன். அந்த கேரக்டர் பெயர் மாவீரன். அதனால் இந்த தலைப்பு வைத்துள்ளோம். சமூக பிரச்னையை பேசப்போகிற படம். குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் யோகி பாபு நன்றாக காமெடி செய்துள்ளார்.

* இயக்குனர் மடோன் அஸ்வின் பற்றி…?
மண்டேலா படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். எளிய மக்களின் வலி, வாழ்க்கையை சொன்னார். சமூக அக்கறையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஒரு கதை சொல்லி இருந்தார். அப்போ தெரியாது அவருக்கு 2 தேசிய விருது கிடைக்கும் என்று. இந்தபடமும் ரசிகர்களை கவரும்.

* படப்பிடிப்பில் எதிர்கொண்ட சவால்கள்…?
இந்த படத்தில் சிங்கிள் ரோல் தான் பண்ணியிருக்கிறேன். சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் செட் போட்டு படம் எடுத்தோம். மழை, புயலால் செட் எல்லாம் பாதித்தது. திரும்ப செட் போட்டு 50, 60 நாள் படப்பிடிப்பு நடத்தினோம்.

* இயக்குனர் மிஷ்கின் பற்றி சொல்லுங்க…?
மிகவும் எனர்ஜியான நபர். நடு இரவு படப்பிடிப்பு நடந்தாலும், எத்தனை முறை ரீ-டேக் கேட்டாலும் மறுப்பு சொல்லாமல் அழகாக நடித்து கொடுத்தார். சக கலைஞர்களை உற்சாகப்படுத்தி பாராட்டுவார். மிஷ்கின் உடன் முதல் இரண்டு நாட்கள் அவருடன் எப்படி பேசுவது என்று தயங்கினேன். ஆனால் தான் ஒரு இயக்குனர் என்ற பாராமல் மிக எளிமையாக செட்டில் நடந்து கொண்டார்.

* அப்பா பற்றி…?
என் அப்பா தான் மாவீரன். மிகவும் கண்டிப்பானவர். அவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகிறது. திருச்சி ஜெயிலில் சூப்பர்டென்ட் ஆக இருந்தவர். நல்ல பெயர் எடுத்தவர். என் மகளிடம் நான் கோபப்பட்டு, அவுங்க அழுதாலும், நான் போய் மன்னிப்பு கேட்பேன்.

* சினிமாவிற்கு வரவில்லை என்றால்….?
நான் ரிஸ்க் எடுத்ததால் தான் சினிமாவில் இருக்கேன். இல்லாவிட்டால் எம்பிஏ படிச்சுட்டு ஏதோ ஒரு வேலைக்கு போய் இருப்பேன்.

* அடுத்த படம் பற்றி…?
மாவீரன் படத்திற்கு பின் எனது அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்போது நான் கமல் சார் தயாரிப்பில் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் ராணுவ வீரன் ரோலில் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதனால் தான் இந்த தலை கட்டு போட்டு இருக்கேன். படத்தின் முதல்பார்வை வரும் வரை இதைக்காட்டக்கூாடது என சொல்லி இருக்காங்க.
* முன்னணி இயக்குனர்களுடன் பயணிப்பது எப்போது?
அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. பலர் அணுகியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து பணியாற்றும் படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

* ஒரு நடிகனாக நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள்?
ஒரு நடிகனாக நான் நடிக்கும் படங்களின் பிரச்னைகளில் அக்கறை காட்டுகிறேன். அது என் கடமை. நடித்தேன், சம்பளம் வாங்கினேன் என்று விட்டு விலகி போய்விட முடியாது. தயாரிப்பு நிறுவனம் நடத்தும் நடிகர்கள் மட்டுமல்ல எல்லோருமே இதை கடந்துதான் செல்ல வேண்டும். சில படங்களில் எனக்கு சம்பளமே வரவில்லை. சில படங்களின் சம்பளத்தை கோர்ட்டுக்கு போய் வாங்க வேண்டியது இருந்தது. இதையெல்லாம் கடந்துதான் சினிமாவில் நிற்க முடியும்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.