விஜய் உள்ளேயே வர முடியாது. பாக்குறியா.. வெகுண்டெழுந்த நிருபர்.. மன்னிப்பு கேட்ட புஸ்ஸி ஆனந்த்

சென்னை:
விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தின் போது தங்களை அவமானப்படுத்தியதாக நிருபர் ஒருவர் குரல் கொடுத்ததால் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மன்னிப்பு கேட்டார். கூட்டத்தில் என்னதான் நடந்தது?

அண்மைக்காலமாக விஜய்யின் செயல்பாடுகள் அனைத்தும் அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளாகவே தெரிகிறது. கடந்த மாதம் கூட தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு விஜய் பரிசளித்தார்.

மாணவர்களுக்குதானே பரிசு வழங்கினார் என்றாலும் கூட, 234 தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது அவரது அரசியல் பிரவேசத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, அந்த நிகழ்ச்சியிலும் அரசியல் சார்ந்த கருத்துகளையே விஜய் பேசினார்.

இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்நிலையில்தான், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதுவும் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டம் தொடங்குவதை முன்னிட்டு விஜய் இல்லத்தின் முன்பு ஏராளமான நிருபர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கிருந்த விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஒரு தொலைக்காட்சி நிருபரை மட்டும் உள்ளே அழைத்து பேட்டி கொடுத்தார். இது மற்ற நிருபர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது ஒரு நிருபர், கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றார்.

அவரை பவுன்சர்கள் தடுத்ததால் ஆவேசமான அந்த நிருபர், “எதற்காக ஒரு நிருபரை மட்டும் உள்ளே அழைத்து பேசுகிறீர்கள். எங்களை எல்லாம் பார்த்தால் மனிதர்களாக தெரியவில்லையா? நாங்களும் காலையில் இருந்து இங்குதானே இருக்கிறோம். இதுபோன்று நீங்கள் செய்தால், விஜய் வரும் போது நாங்கள் இங்கு தர்ணாவில் அமர்ந்துவிடுவோம். அப்புறம் விஜய் உள்ளேயே போக முடியாது. பாக்குறியா?” என சத்தம் போட தொடங்கினார்.

இந்நிலையில், இந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், “நடந்த தவறுக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த நிருபர் எனது நீண்டகால நண்பர். அதனால் அவரை அழைத்து பேசினேன். மற்றபடி, உங்களை அவமானப்படுத்தும் எண்ணத்தில் அப்படி செய்யவில்லை. இனி இதுபோன்று நடக்காது. மன்னித்துவிடுங்கள்” என்றார். இதையடுத்து, நிருபர்கள் சமாதானம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.