15 லட்சம் மோசடி புகார்: போலீசில் ஆஜரான தயாரிப்பாளர் ரவீந்தர்

லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை 2வதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரின் வயது வித்தியாசம், உருவ வேற்றுமை காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலானது இவர்கள் திருமணம்.

இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது அமெரிக்கா வாழ் தமிழர் விஜய் என்பவர் ஆன்லைன் மூலம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில் செயலி ஒன்றின் மூலம் ரவீந்தர் சந்திரசேகர் தனக்கு அறிமுகம் ஆனதாகவும், அந்த பழக்கத்தில் ரவீந்தர் சந்திரசேகர் படத் தயாரிப்பு செலவுக்கு கேட்ட 15 லட்சத்தை கடனாக கொடுத்ததாகவும், ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர் ஏமாற்றி வருவதாகவும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் ரவீந்தர் சந்திரசேகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்ட ரவீந்தர், அதை விரைவில் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறியதாக போலீஸ் தரபில் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.