நியூயார்க் : உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடான இந்தியாவில், 15 ஆண்டுகளில் 41.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு மிகப் பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐ.நா., வளர்ச்சி திட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலையின் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைப்பு இயக்கமும் இணைந்து, உலகளாவிய வறுமை குறியீட்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இதில், உலக அளவில் இந்தியா உட்பட, 25 நாடுகள் தங்கள் வறுமை குறியீட்டை 15 ஆண்டுகளில் பாதியாக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விபரம்:
இந்தியா, சீனா, கம்போடியா, காங்கோ, ஹோண்டுரஸ், இந்தோனேஷியா, மொரோக்கோ, செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட 25 நாடுகள், தங்கள் வறுமை குறீயீட்டை 15 ஆண்டுகளில் பாதியாக குறைத்து உள்ளன.
உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடான சீனாவை, கடந்த ஏப்., மாதம் இந்தியா முந்தியது.
புள்ளிவிபரம்
அன்றைய நிலவரப்படி இந்தியாவில் 142.86 கோடி மக்கள் தொகை உள்ளதாக ஐ.நா., புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இந்நிலையிலும், வறுமை குறியீட்டை குறைப்பதில் இந்தியா மிக திறம்பட செயல்பட்டுள்ளது.
கடந்த, 2005 – 06 முதல் 2019 – 21 வரையிலான 15 ஆண்டுகளில், இந்தியாவில் 41.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் வறுமை குறீயீட்டு விகிதம் 2005 – 06ல் 55.1 சதவீதமாக இருந்தது. இது, 2019 – 21ல் 16.4 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2005 – 06 காலகட்டத்தில் இந்தியாவில் வறுமையில் இருந்தோர் எண்ணிக்கை 64.50 கோடியாக இருந்தது.
இது, 2015 – 16ல் 37 கோடியாக குறைந்து, 2019 – 21ல் 23 கோடியாக சரிந்துள்ளது.
இந்திய அரசு நிறைவேற்றிய பல்வேறு மக்கள் நல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை, குழந்தை இறப்பு விகிதம், சமையல் எரிவாயு கிடைக்கப் பெறாதோர், போதிய சுகாதார வசதிகள் இன்றி வாழ்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன.
மேலும், சுத்தமான குடிநீர் வசதி கிடைக்காமல் அவதிப்பட்டோர், மின்சார வசதி கிடைக்கப் பெறாதோர், வீட்டு வசதி இல்லாதோர் விகிதம், 2005 – 06 காலகட்டத்தை விட, 2019 – 21ல் பாதிக்கு பாதியாக குறைந்து உள்ளன.
வறுமை குறியீடு
உலகில் உள்ள 19 நாடுகள், தங்கள் வறுமை குறியீட்டை 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துள்ளன.
இதில், 17 நாடுகளின் வறுமைக் குறியீடு ஆரம்பத்தில் 25 சதவீதமாக இருந்தபோது, இந்தியா மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வறுமை குறியீட்டு விகிதம் ஆரம்ப நிலையில் 50 சதவீதத்திற்கும் மேல் இருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவு சேகரிப்பில் சிக்கல்!
இந்த உலகமே தரவுகள் அடிப்படையில் தான் இயங்குகிறது. ‘டிஜிட்டல்’ யுகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராகிறது. ஆயினும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பல கோடி ஏழை மக்களின் நிலை, என்ன ஆனது என்ற தரவு நம்மிடம் இல்லை. இது எளிதில் தீர்வு காணக்கூடிய பிரச்னை தான். வறுமை குறித்த தரவுகள் மிக விரைவாகவே சேகரிக்கப்படுகின்றன.
சபீனா அல்கோர்
இயக்குனர், ஆக்ஸ்போர்டு பல்கலையின் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைப்பு அமைப்பு
அதிக கவனம் தேவை!
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன், வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஒரு நிலையான தன்மை இருந்தது. பெருந்தொற்றுக்கு பின் கல்வி உள்ளிட்ட துறைகளில், உலகம் மிகப் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. இவற்றை சரியாக கண்டறிந்து வறுமை மீட்பு நடவடிக்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, தரவு சேகரிப்பில் நாம் முன்பை விட அதிக கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டி உள்ளது.
பெட்ரோ கான்சேகோ
இயக்குனர், மனித மேம்பாட்டு
அறிக்கை அலுவலகம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்