டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மாற்றப்படுமா? அமைச்சர் கொடுத்த அப்டேட்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இருப்பினும் காலை நேரத்திலும், இரவு 10 மணிக்கு மேலும் பல இடங்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை காலையிலேயே திறக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிர்ப்புகள் வரத் தொடங்கின. எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை காலையில் திறக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்” என்று விளக்கம் அளித்தார்

பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்குவது தற்போதும் தொடர்கிறது. செங்கல்பட்டு அருகே 10 ரூபாய் கேட்பதை தட்டிகேட்டவரை போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியாகியது. இன்னும் பத்து ரூபாய் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பாட்டிலுக்கு எதுக்குப்பா 10 ரூபா?

அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “அந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்தேன். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாட்டிலுக்கு பத்து ரூபாய் இரண்டோர் இடங்களில் வாங்கப்படுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் வாங்கப்படுகிறது என்பது உண்மை அல்ல.” என்று கூறினார்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதனால் தான் இதுபோன்று 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது குறித்து பேசிய அமைச்சர், “கடை வாடகை, மதுபாட்டில்கள் வந்து இறங்கும் போது ஏற்படும் சேதம் ஆகியவற்றினால்கூட அவ்வாறு வாங்கியிருக்கலாம். இது தொடர்பாக ஆலோசிக்க 18 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் ஆலோசனைக்கு அழைத்துள்ளோம். இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றிற்கு அருகே உள்ள கடைகள் குறித்து முதல்வர் கணக்கெடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.