திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் சுதீப் பரபரப்பு கடிதம்

பெங்களூரு : திரைப்பட தயாரிப்பாளர் குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக, திரைப்பட வர்த்தக சபைக்கு, நடிகர் சுதீப் கடிதம் எழுதியுள்ளார்.

கன்னடத்தில் பல படங்களை தயாரித்த குமார், சில நாட்களுக்கு முன் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் தன் படத்தில் நடிக்க முன் பணம் பெற்ற நடிகர் சுதீப், கால்ஷீட் கொடுக்காமல் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார். இதனால் கொதித்தெழுந்த நடிகர் சுதீப், தயாரிப்பாளர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்ததுடன், 10 கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், திரைப்பட வர்த்தக சபையை உதவியையும் சுதீப் நாடியுள்ளார்.

வர்த்தக சபைக்கு, நடிகர் சுதீப் எழுதிய கடிதம் : கலைஞர்களின் பிரச்னைகளை, தீர்த்து வைப்பது உங்களின் கடமை. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. தயாரிப்பாளர் தரப்பு, நடிகர் அல்லது தொழில்நுட்ப வல்லுனர்கள் மீது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் போது, குறைந்தபட்ச ஆவணங்களை ஆய்வு செய்வது, உங்களின் பொறுப்பாகும். இதற்கு முன், ஆவணங்களை ஆய்வு செய்யவில்லை என, நான் கூறவில்லை. ஆனால் என் விஷயத்தில், அதுபோன்று வர்த்தக சபை நடக்கவில்லை. என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

என் தரப்பில் கூற வேண்டிய, அனைத்தையும் விளக்கியுள்ளேன். தயாரிப்பாளர் குமாரை நான் பலமுறை நேரில் சந்தித்துள்ளேன். அனுதாபத்துடன் அவருக்கு உதவி செய்ய முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை பற்றி, பொய்யான வதந்திகளை பரப்பியதால், அவரை சந்திப்பதை நிறுத்தினேன். இதை பற்றி வர்த்தக சபையில், நான் விவரித்தும் கூட, எனக்கு எதிராக குற்றம்சாட்டினர். தனி மனித சுதந்திரத்தை மதிக்கிறேன்.

சமாதான பேச்சு என்றால் என்ன. அந்த தயாரிப்பாளர், தன் கஷ்டங்களுக்கு, என்னை பொறுப்பாளியாக்கி, பலவந்தமாக பணம் பறிப்பதும், பல ஆண்டுகள் நான் காப்பாற்றி வந்த கவுரவத்தை குலைப்பதும் தான் சமாதானமா. தயாரிப்பாளருக்கு நான் எந்த பணமும் தர வேண்டியது இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.