தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை மாற்றியமைத்த `16 வயதினிலே’ படத்தைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு, நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ வெளியான பிறகுதான், பல படங்களின் படப்பிடிப்புகள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. வெளிப்புறப் படப்பிடிப்பில் ஒரு சகாப்தமே உருவானது எனலாம். அந்தக் காலத்தில் அப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது என்பது சாதாரண விஷயமில்ல. இந்தப் படம் தவிர, ‘கன்னிப்பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, கமலின் ‘மகாநதி’ உட்பட பல படங்களைத் தயாரித்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நடிகர் ராஜேஷும், ராதிகாவும் பண உதவி செய்துவந்ததாகச் சொல்கிறார்கள்.

மறைந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் நினைவுகள் குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டேன். ’16 வயதினிலே’ படத்தின் பத்திரிகைத் தொடர்பாளராகவும், பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவர் என்பதால், நெகிழ்வுடன் பேச ஆரம்பித்தார் சித்ரா லட்சுமணன்.

“தமிழ் சினிமாவில் பல ஆளுமைகளை அறிமுகப்படுத்தின பெருமை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிற்கு உண்டு. பாரதிராஜா, பாக்யராஜ், ராதிகானு பல ஆளுமைகளை அறிமுகப்படுத்தினார். எஸ்.ஏ.ராஜ்கண்ணுவோடு நான் நீண்ட கால நட்பில் இருந்தேன். அவர் ஒரு ரசனைமிக்க தயாரிப்பாளர். இல்லனா, பாரதிராஜாவை அவரால அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்காது. அந்தக் காலகட்டத்துல பொள்ளாச்சி ரத்னம், கே.ராஜகோபால், எஸ்.ஏ.ராஜ்கண்ணு இவங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து படங்கள் தயாரிச்சிட்டு இருந்தாங்க அப்படி ஒரு படப்பிடிப்பில் பாரதிராஜா உதவி இயக்குநரா இருந்தார். அங்கே அவரது வேலைகளை நேர்ல பார்த்ததுல, பிரமிச்சிட்டார் ராஜ்கண்ணு.

பாரதிராஜா, மிகப்பெரிய இயக்குநரா வருவார்னு கணிச்சார். அவர்கிட்ட பாரதிராஜா ரெண்டு மூணு கதைகள் சொன்னார். அதுல எஸ்.ஏ.ராஜ்கண்ணு தேர்ந்தெடுத்த கதை தான் ’16 வயதினிலே’. அந்தப் படம் உருவாகும் போது கலைப்படமாகத்தான் இருந்தது. அதன்பிறகு பல மாற்றங்களால அது கலையம்சம் பொருந்திய கமெர்ஷியல் படமாக மாறுச்சு. பாரதிராஜா என் நீண்டகால நண்பர். அவர் உதவி இயக்குநரா இருந்த காலங்கள்ல இருந்து அவரோட நட்பு உண்டு. பனகல் பார்க் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்ஸுக்காக நாங்க காத்திருந்தோம். அந்த காத்திருப்பில்தான் என்கிட்ட ’16 வயதினிலே’ கதையைச் சொன்னார் பாரதிராஜா. ‘இந்தக் கதைக்கு எனக்கொரு தயாரிப்பாளர் கிடைச்சிட்டார்’னு சொல்லி மகிழ்ந்தார். இந்தப் படத்துல நான் பத்திரிகைத் தொடர்பாளனாகவும் பணியாற்றினேன். படப்பிடிப்பு தொடக்க அழைப்பிதழைக்கூட நான்தான் அச்சிட்டுக் கொடுத்தேன்.
ஒரு சம்பவம் சொல்றேன். ’16 வயதினிலே’ படப்பிடிப்பு மைசூருக்குப் பக்கத்துல சிவசமுத்திரத்துல நடந்த போது நான், கமல்ஹாசன், காந்திமதி எல்லாரும் மைசூருக்கு டிரெயின்ல போனோம். மைசூருக்குப் படப்பிடிப்புக்குப் போற அத்தனை பேருமே பெங்களூரில் உள்ள மோதி மகால்லதான் குளிச்சிட்டு, ஃப்ரெஷ்ஷாகிட்டு ஸ்பாட்டுக்குக் கிளம்பிப் போவோம். படப்பிடிப்பு தொடங்கிய சில நாளிலேயே இங்கிருந்து பத்திரிகையாளர்களையும் வரவழைச்சிருந்தோம். பிரஸ் மீட் வச்சிருந்தோம்.
அதுல பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு பேசியது இன்னும் பசுமையா ஞாபகத்துல இருக்கு. அதுல அவர் ஒரு விஷயத்தை அழுத்தமா குறிப்பிட்டார். ‘இன்னிக்கு தமிழ் சினிமாவில் இருக்கின்ற முக்கியமான இயக்குநர் பாலசந்தரோடு போட்டிப் போடக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்த ஒரு மனிதரை உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன். அவர்தான் பாரதிராஜா’ன்னு சொன்னார். அவரோட முதல் படம் இது. அதோட படப்பிடிப்பில் அவர் அப்படிச் சொல்லியிருந்தார்னா, எப்படி ஒரு தீர்க்க தரிசனம்னு ஆச்சரியப்பட்டேன்.

எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் இழப்பு மொத்த தமிழ் சினிமாவுக்குமே இழப்புதான். அவருக்குப் பொருளாதார சுமை இருந்தபோது ‘மகாநதி’யில் அவரைத் தயாரிப்பாளர் ஆக்கி அந்தச் சுமையைக் குறைத்தார் கமல்ஹாசன். ரஜினிக்கு ராஜ்கண்ணு மீது பிரியம் உண்டு. ’16 வயதினிலே’ திரும்ப வெளியிடணும்னு முயற்சி எடுத்த போது, அதற்கான விழாவிற்கு ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார். கமலும், ரஜினியும் இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் அப்படியொரு விழாவில்கூட ரஜினி பங்கேற்கவில்லை. ராஜ்கண்ணுக்கு ஒரு படம் பண்ணிக் கொடுக்கும் எண்ணம் ரஜினிக்கு இருந்ததாலதான் ’16 வயதினிலே’ விழாவிற்கு வந்து கலந்து கொண்டார்னு நினைக்கறேன்.
சமீபகாலமாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவர் படம் தயாரிக்காமல் இருந்தது தமிழ் சினிமாவிற்குப் பெரும் இழப்புதான். அவரது மரணம் துரதிர்ஷ்டமானதுன்னுதான் சொல்லணும்!” என்றார்.