டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் மலை மாவட்டங்களான டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் ஆகியவற்றில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணியில் உள்ள BGPM கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. இந்த மலை மாவட்டங்களில் பாஜக பெரும் தோல்வியை தழுவி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பொதுவாக 3 அடுக்கு உள்ளாட்சி முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் மலை மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங்கில் 2 அடுக்கு உள்ளாட்சி முறை நடைமுறையில் இருக்கின்றன. கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி ஆகியவை மட்டுமே இம்மலை மாவட்டங்களில் உள்ளன.
டார்ஜிலிங், கலிம்போங்கில் பாரதிய கூர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா BGPM, திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணி கட்சியாகும். பிஎஜிபிஎம்-க்கு எதிராக பாஜக தலமையில் 8 கட்சி கூட்டணி களத்தை எதிர்கொண்டது. ஐக்கிய கூர்க்கா கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த அணி தேர்தலில் போட்டியிட்டது.
இம்மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள்: டார்ஜிலிங் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 156 பஞ்சாயத்து சமிதிகளில் திரிணாமுல் கூட்டணி கட்சியான பிஜிபிஎம் 96 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 19 இடங்கள்தான் கிடைத்தன. சுயேட்சைகள் 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
டார்ஜிலிங்கில் 70 கிராம பஞ்சாயத்துகளில் 598 இடங்களில் பிஜிபிஎம் 349 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக அணிக்கு 59 இடங்கள்தான் கிடைத்தன. சுயேட்சைகள் 185 இடங்களில் வென்றன.
கலிம்போங் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 42 கிராம பஞ்சாயத்துகளில் 281 இடங்களில் 168-ல் பிஜிபிஎம் வென்றது; பாஜகவுக்கு 29 இடங்கள்தான் கிடைத்தன. சுயேட்சைகள் 82 இடங்களில் வென்றுள்ளனர். பிஜிபிஎம் கூட்டணி கட்சியாக இருந்த போதும் திரிணாமுல் ஒரு இடத்தில் வென்றுள்ளது. இம்மாவட்டத்தில் 76 பஞ்சாயத்து சமிதிகளில் ல் பிஜிபிஎம் 39-ல் வென்றது. பாஜக 7 இடங்களிலும் சுயேட்சைகள் 30 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
டார்ஜிலிங், கம்போலிங் மலை மாவட்டங்களில் வெற்றி கொடியை பறக்கவிட்ட பிஜிபிஎம் கட்சி 2021-ல்தான் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு கூர்க்காக பிராந்திய கவுன்சில் தேர்தலில் வென்று அந்த நிர்வாகத்தை பிஜிபிஎம் கட்சி வென்றது. தற்போது 2 மலை மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களையும் கைப்பற்றி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
டார்ஜிலிங்கும் பாஜகவும்: 2009, 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தலில் டார்ஜிலிங் தொகுதியில் பாஜகதான் அமோக வெற்றியை பெற்றது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஜஸ்வந்த்சிங், 2009-ல் டார்ஜிலிங் தொகுதியில் வென்று எம்பியானார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் ராஜூ பிஸ்தா சுமார் 59.19% வாக்குகளை டார்ஜிலிங் தொகுதியில் பெற்றிருந்தார். அத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 26.56% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். டார்ஜிலிங், கம்போலிங், உத்தர் தினாஜ்பூர் மாவட்டங்களில் மொத்தல் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 5 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது. டார்ஜிலிங், கம்போலிங் மலை மாவட்டங்கள் பாஜகவின் கோட்டை என்ற இமேஜ் தகர்க்கப்பட்டு மரண அடி கொடுத்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல்!