புதுடெல்லி: வட இந்தியா முழுவதும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி பருவமழை மற்றும் பருவக்காற்று சங்கமிப்பதால் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி 23 மாநிலங்களில் கன மற்றும் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உத்தராகண்டில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசத்திலும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்னும் ஓரிரண்டு நாட்களில் கனமழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழையால் பாலங்கள்துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. இதுதவிர, நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலத்த பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி யமுனை நதியில் திங்கள்கிழமை மாலை நீர்மட்டம் அபாய அளவை தாண்டி பாய்ந்து வருகிறது.
ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ளசேதங்களை மதிப்பிடுவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயத்தால்இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, தண்ணீர், தங்கும்வசதி ஏற்படுத்தி தர மாவட்டநிர்வாகங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன.
மோசமான பாதிப்பு: வட இந்தியாவில் கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசம்முதலிடத்தில் உள்ளது. இங்கு 30 பேர் உயிரிழந்ததுடன், ரூ.3,000கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தேசியநெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் அமர்நாத் யாத்திரை 4-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 15,000 யாத்ரீகர்கள் நடுவழியில் பரிதவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.